Monday, March 28, 2011

தென்காசி தொகுதியில் வறட்சி பகுதிகளை வளமாக்க கருப்பாநதி பாசன கால்வாய் அமைக்கப்படும்

வீரகேரளம்புதூர் : "தென்காசி தொகுதியில் ஆலங்குளம் யூனியன் வடக்கு பகுதியில் வறட்சி பகுதியை வளமாக்க கருப்பநதி பாசன கால்வாய் அமைக்கப்படும்' என வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியில் நடந்த பிரசாரத்தில் திமுக வேட்பாளர் கருப்பசாமி பாண்டியன் உறுதியளித்தார். திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தென்காசி தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கருப்பசாமிபாண்டியன் வீரகேரளம்புதூர் தாலுகா பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ""ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போதும் எண்ணிலடங்கா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக அரசு அரியணை ஏறியதும் அவை அனைத்தும் செயல்படுத்தப்படும். வீரகேரளம்புதூர் தாலுகாவில் மருக்காலன்குளம் தொடங்கி ஊத்துமலை, கீழக்கலங்கல், உச்சிபொத்தை உள்ளிட்ட பகுதிகள் வறட்சி பகுதிகளாக உள்ளன. இப்பகுதியை வளமாக்க நிலத்தடி நீராதாரத்தை பெருக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கருப்பாநதியிலிருந்து பாசன கால்வாய் கலைஞர் கால்வாய் என்ற பெயரில் அமைத்துத் தரப்படும். அதேபோல் ராமநதியிலிருந்து காமராஜ் கால்வாய் என்ற பெயிரிலும் கால்வாய் அமைக்கப்படவுள்ளது. இதுபோல் நல்ல பல திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்'' என்றார். பிரசாரத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பழனிநாடார், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காமராஜ், காங்.,மாநில செயலாளர் சார்லஸ், திமுக மாவட்ட பிரதிநிதிகள் ராஜேஸ்வரன், முரளிராஜா, வாடியூர் மரியராஜ், தர்மர் (எ) அந்தோணிசாமி, முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மேலக்கலங்கல் பஞ்.,தலைவர் அன்பழகன், அச்சங்குன்றம் பஞ்.,தலைவர் முருகேசன், ஜோசப், பூமாலைராஜா, செயலாளர்கள் பிலிப்ராஜா, ராஜேந்திரன், வீராணம் இருதாலய மருதப்பபாண்டியன், ஷேக்மைதீன், தங்கையா, செல்வம், முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜேசுராஜன், வீ.கே.புதூர் செயலாளர் மாரியப்பன், முன்னாள் பஞ்.,தலைவர் பரசுராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீரகேரளம்புதூர், வீராணம், அதிசயபுரம், நாச்சியார்புரம், சோலைசேரி, கருவந்தா, அச்சங்குன்றம், லெட்சுமிபுரம், பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், வாடியூர், குருந்தன்மொழி பகுதிகளில் கருப்பசாமிபாண்டியன் பிரசாரம் செய்தார்.

வீ.கே.புதூர் பகுதியில் சரத்குமார் ஓட்டு சேகரிப்பு

வீரகேரளம்புதூர் : தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார் வீரகேரளம்புதூர் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
வீரகேரளம்புதூர் பகுதியில் அகரம், நாச்சியார்புரம், காவலாக்குறிச்சி, சோலைசேரி, கருவந்தா, அச்சங்குன்றம், லெட்சுமிபுரம், பரங்குன்றாபுரம், வாடியூர், வீரகேரளம்புதூர், வீராணம், அதிசயபுரம், ராஜகோபாலபேரி, தாயார்தோப்பு ஆகிய ஊர்களில் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுகளை கேட்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சரத்குமார் ஓட்டு சேகரித்தார்.
ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து சரத்குமாரை வரவேற்றனர். ஊழல் மலிந்த ஆட்சியை அகற்றவும், வாரிசு அரசியலை அழிக்கவும், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். பெண்கள் கூடியிருந்த இடங்களில் பிரசார வேனிலிருந்து இறங்கிச் சென்று வணங்கி ஓட்டு சேகரித்தார்.
பிரசாரத்தின் போது சுரண்டை எஸ்.வி.கணேசன், சமக மாவட்ட துணை செயலாளர் கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் ஆர்.வி.ராமர், ஆலங்குளம் ஒன்றிய துணை சேர்மன் வீரபாண்டியன், குருந்தன்மொழி என்.எச்.எம்.பாண்டியன், வீராணம் பஞ்., முன்னாள் துணை தலைவர் வீரபாண்டியன், கிளை செயலாளர் ஜிந்தா, இந்திய கம்யூ., தாலுகா செயலாளர் ஜின்னா, வீரகேரளம்புதூர் செந்தில், செயலாளர் சுப்பையாபாண்டியன் உட்பட அனைத்து கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வீரகேரளம்புதூர் எல்கையில் அதிமுக தொண்டர் தாயார்தோப்பு தினேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பில் ஆலங்குளம் ஒன்றிய மகளிரணி செயலாளர், கருவந்தா கிளை செயலாளர் வைரக்கனி உட்பட நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வீ.கே.புதூர் மக்கள் ஓட்டு யாருக்கு?

வீரகேரளம்புதூர் : தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகள் பன்னிரண்டை கடந்த நிலையிலும் அடிப்படைத் தரம் உயராத வீரகேரளம்புதூரின் தலையெழுத்தை மாற்ற உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை தர இத்தாலுகா பொதுமக்கள் தயாராக உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் கூடுதல் தாலுகாவாக இயங்கி வந்த வீரகேரளம்புதூர் 1-9-1998ல் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தனி தாலுகாவுக்கான அடிப்படை வசதிகளில் தரம் உயர்ந்துள்ளதா என கேட்டால் இல்லை என்றுதான் பதிலாக கிடைக்கும். ஜமீன் காலந்தொட்டு போலீஸ் ஸ்டேஷனும், பிரேத பரிசோதனை கூடத்துடன் அரசு ஆஸ்பத்திரியும் இங்கு இயங்கி வந்தது. பின்னர் இது மருந்து கூடமாக மாற்றப்பட்டு தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது. தினமும் சுமார் 300க்கும் கூடுதலான நோயாளிகள் வந்து செல்கின்றனர். "24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும்' என்ற அறிவிப்பு உள்ளதே தவிர பெண் டாக்டர் இல்லை. மருத்துவ அலுவலரின் சொந்த முயற்சியால் மட்டுமே 4 படுக்கைகள் உள்ளன. எக்ஸ்ரே இல்லை. சித்த மருந்துகள் இல்லை. எனவே வீரகேரளம்புதூரை சேர்ந்தவர்கள் அல்லாது இதில் அடங்கிய பிற 25 கிராம மக்களும் மருத்துவ வசதிக்காக சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிகளை நாடி செல்லும் நிலையே உள்ளது. எனவே இது 30 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். பெண் டாக்டர்களும் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும். இத்தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய நிலம் சம்பந்தமான வழக்குகளுக்காக தென்காசி தாலுகா தலைநகருக்கும், குற்ற செயல்கள் சம்பந்தமான வழக்குகளுக்காக செங்கோட்டை தாலுகா தலைநகரிலுள்ள கோர்ட்டுக்கும் செல்ல வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக வீ.கே.புதூர் தாலுகாவிலேயே கோர்ட் அமைக்க வேண்டும். வீ.கே.புதூர் தாலுகாவில் 26 கிராமங்கள் உள்ளன. வீ.கே.புதூரிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியிலுள்ள அதிசயபுரம், வீராணம், சோலைசேரி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், சண்முகாபுரம், அமுதாபுரம், மருக்காலன்குளம் மற்றும் மேலக்கலங்கல், கீழக்கலங்கல், குறிச்சான்பட்டி, வாடியூர், கரையாளனூர், மரியதாய்புரம், கருவந்தா ஆகிய கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. மருக்காலன்குளத்திலிருந்து தாலுகா அலுவலகத்திற்கு ஒருவர் வர வேண்டுமானால் சங்கரன்கோவில் சென்று அங்கிருந்து சுரண்டை வந்து பின் வீ.கே.புதூர் வரவேண்டும். இதற்கு மூன்று மணி நேரமாகும். தேடிவந்த தாலுகா அலுவலக அலுவலர் அன்று விடுமுறை என்றால் ஒருநாள் முழுவதும் வீணாகிவிடும் நிலையே உள்ளது. எனவே இக்கிராமங்களுக்கு கூடுதல் அரசு பஸ் வசதி செய்து தரவேண்டும். 26 கிராம மக்களும் தேடி வரும் தாலுகா தலைநகரத்தில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு நிழற் குடையோ, பெண்கள் கூட ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதியோ, பஸ் நின்று செல்வதற்கு பஸ் ஸ்டாண்டோ இல்லை. இக்குறைகளை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்து தரவேண்டும். இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயிகளே உள்ளனர். இவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு பிற இடங்களில் அமைந்துள்ள சந்தைகளுக்கே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பணமும், நேரமும் விரயமாகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு வீ.கே.புதூரில் உழவர் சந்தை அமைத்து தர வேண்டும். வீ.கே.புதூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை கூடுதலாக ஒரு தேசிய மயமாக்கப்பட்ட பாங்க் கிளை வேண்டும் என்பதே. இங்கு கனரா பாங்க் கிளை உள்ளது. இங்கு 26 ஆயிரத்திற்கும் கூடுதலாக வங்கி கணக்குகள் உள்ளதாலும், அரசு அலுவலகங்கள் சம்பந்தமான வகைகளுக்கும், ஓய்வூதியர்களுக்கும் இக்கிளை மூலமாகவோ பணப்பரிமாற்றம் நடப்பதாலும், சாதாரண சேவைகளுக்காக பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நேர விரயத்தை கருத்தில் கொண்டு வேறு ஒரு தேசியமயமாக்கப்பட்ட பாங்க் கிளையை வீ.கே.புதூரில் துவக்க வேண்டும். வீரகேரளம்புதூர் தாலுகாவில் அடங்கிய வீ.கே.புதூர் பிர்க்கா பகுதிகளான ராஜபாண்டி, ராஜகோபாலப்பேரி, வெள்ளகால் போன்ற பகுதிகள் கீழப்பாவூர் யூனியனிலும், ஊத்துமலை, கருவந்தா பிர்க்கா பகுதிகள் ஆலங்குளம் யூனியனிலும் உள்ளன. தொகுதி மறுசீரமைப்பின்படி வீ.கே.புதூர் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகள் அனைத்தையும் தென்காசி தொகுதியில் இணைத்தது போலவே இவற்றையும் அருகிலுள்ள கழுநீர்குளம், முத்துகிருஷ்ணபேரி பகுதிகளையும் ஒன்றாக இணைத்து வீரகேரளம்புதூர் யூனியனை புதிதாக ஏற்படுத்த வேண்டும். வீரகேரளம்புதூரில் சார்நிலை கருவூலம் அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்த ஒவ்வொரு ஆட்சிலும் இது நடக்கும், நடக்கும்...என்றார்கள். ஆனால் காலமும், காட்சியும் தான் கடந்ததே ஒழிய காரியம் எதுவும் நடக்கவில்லை. எனவே இம்முறை மாற்றத்தை தர உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கு மட்டுமே தங்களது ஓட்டுகளை தர வீரகேரளம்புதூர் தாலுகா பொதுமக்கள் தயாராக உள்ளனர்.