Saturday, October 22, 2011

பார்வையற்றோர்க்கு தன்னம்பிக்கை தரும் செயற்கை கண்கள்

பார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தொண்டு நிறுவனம் சார்பில், சலுகை விலையில் செயற்கை கண்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பிறவியிலேயே பார்வை திறன் இல்லாதவர்கள், விபத்தில் கண் பார்வை இழந்தவர்கள், கண் சுருக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட குறைபாடுகள் உடையவர்களின் முகத்தோற்றம் பார்பதற்கு சற்று பொலிவற்று காணப்படும். இதனால், இக்குறைபாடுகளை உடையோர், தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்களை சமூகத்தில் இருந்து தனிமைபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.இதனால், பார்வையற்றவர்களில் திறமை மிக்க பல சாதனையாளர்களும், சத்தம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர். பார்வையற்றோரின் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலும் செயற்கை கண்கள் வடிவமைத்து, அவற்றை பொருத்தும் பணியில், திருவான்மியூர்,
"பிரீடம் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மருத்துவம் மற்றும் சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வரும், இந்த அறக்கட்டளை சார்பில் தற்போது, செயற்கை கண் நிபுணர்களைக் கொண்டு கண் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செயற்கை கண் நிபுணர் திவாகர் கூறியதாவது:கண் பார்வையற்றவர்கள் மற்றும் கண் இல்லாதவர்களுக்கு செயற்கை கண் பொருத்துவதன் மூலம் பார்வை திரும்ப பெறமுடியாது. ஆனால், இழந்த அவர்களது கண் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். இதனால், பார்வையற்றவர்களுக்கு தங்களுக்கு கண் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை கிடைக்கிறது.மாற்றுத் திறனாளிகளின் கண் மற்றும் மருத்துவச் சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர், மாதிரி அளவெடுத்து செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. "பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்' என்ற மருத்துவ வகை, பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த செயற்கை கண்கள் முற்றிலும் பாதுகாப்பானது. இதை,பொருத்திக்கொள்ள வயது வரம்பு கிடையாது.இந்திய அளவில், செயற்கை கண் வடிவமைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். தமிழகத்தில் தற்போது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் செயற்கை கண் பொருத்துவதற்கு, நான்கு முதல் ஐந்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி யுள்ளதால், அடித்தட்டு மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.எனவே, ஏழை எளிய மக்களும் பயனடையும் வகையில், எங்களின் அறக்கட்டளையின் சார்பில் தற்போது, குறைந்த விலைக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே
எங்களது நோக்கம்.ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செயற்கை கண் பொருத்த அரசு முன்வந்தால், அவர்களின் தன்னம்பிக்கை மேம்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

நன்றி : தினமலர் 

Sunday, October 16, 2011

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்


அதிக சம்பளம், இலவச தங்குமிடம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் என்பன போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் மோசம் போய், அந்தந்த நாடுகளின் சிறைகளில் அவதிப்பட்டு திரும்புகின்றனர். முறையான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு சென்றால், கை நிறைய சம்பளத்துடன் பாதுகாப்பும் கிடைக்கும்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. விவசாயம் இல்லாததால், பலர் நகரங்களை நோக்கி வேலை தேடி படையெடுக்கின்றனர். சிலர், "வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இவர்களை போன்றோர்களை தேடிக் கொண்டிருக்கும் மோசடி ஏஜன்டுகள், உள்ளூர் பிரமுகர்கள், வெளிநாட்டில் வேலை தயாராக உள்ளது. சம்பளம் பல ஆயிரம்; தங்குமிடம் இலவசம். ராஜ வாழ்க்கை வாழலாம்' என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதில் மயங்குவோரிடம், சில லட்சங்களை பெற்றுக் கொண்டு, பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.பெரும்பாலும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு, "டூரிஸ்ட் விசா' எடுக்கப்படுகிறது. இது, அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லும். பின், நாடு திரும்பி விட வேண்டும். இந்நிலையில், "டூரிஸ்ட் விசா' மூலம் வெளிநாட்டிற்குச் செல்லும் அப்பாவிகள், ஆறு மாதம் முடிந்தவுடன் "ஓவர் ஸ்டே' என்ற வகையில் அந்நாட்டு போலீசாரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.பலரின் பாஸ்போர்ட்டுகளை வேலை கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பிடுங்கி வைத்துக் கொள்வதால், நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். சொன்னபடி சம்பளமும் கிடைக்காமல், நாடு திரும்பவும் முடியாமல், சிறையில் அடைபட்டு சித்திரவதைக்கு உள்ளாகும் இளைஞர்கள், பின், இந்திய அரசின் முயற்சியின் பேரில் நாடு திரும்பும் அவலமான சூழ்நிலை நிலவுகிறது.வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஐ.டி., இன்ஜினியர்கள் ஆனாலும் சரி, கட்டட வேலைக்கு செல்பவர்களானாலும் சரி, இந்த விதிமுறைகளை கடைபிடித்தால் அவர்களுக்கு வேலை, சம்பளம், மருத்துவக் கவனிப்பு, பாதுகாப்பு ஆகியவை உத்தரவாதமாக இருக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து குடியுரிமை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "முதலில் எம்ப்ளாய்மென்ட் விசா மூலம் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் சுற்றுலா விசா (டூரிஸ்ட் விசா) மூலம் வேலைக்கு செல்லக்கூடாது. 10ம் வகுப்பிற்கு கீழே படித்தவர்கள் இ.சி.ஆர்., (இமிகிரேசன் கிளியரன்ஸ் ரிக்கொயர்டு) சான்றிதழ் பெற வேண்டும். இதை, புரெக்டக்டர் ஆப் இமிகிரன்ட் என்ற அதிகாரியிடம் பெறலாம்.அடுத்ததாக, வேலை வாய்ப்பு தரும் நிறுவனம் தனக்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுகின்றனர்; அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு; சலுகைகள் என்னென்ன ஆகியவை குறித்த தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரத்திற்கு கொடுத்து, அங்கு அட்டஸ்டட் பெற வேண்டும். அதோடு. தங்கள் சார்பாக எந்த நிறுவனம் இந்தியாவில் ஆட்களை தேர்வு செய்து அனுப்பப்போகிறது என்ற தகவலும் கொடுக்கப்பட வேண்டும். (இந்தியாவில் ஆட்களை எடுக்கும் நிறுவனம், மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறையிடம் முறையான உரிமம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்)மூன்றாவதாக, குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனமும், வேலைக்குச் செல்லும் தொழிலாளியும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை (அக்ரிமென்ட்) செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்த நகல், இந்திய தூதரகத்தில் அட்டஸ்டட் செய்யப்பட வேண்டும். குறைந்தது, இந்த மூன்று விதிமுறைகளை கடைபிடித்தால் கூட போதும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், வேலைக்கு சேர்ந்த பின் அவதிப்பட வேண்டியதிருக்காது' என்றார்.

வெளிநாட்டு வேலைக்கு போக விரும்பும் இளைஞர்களுக்கு உதவுவதற்கு, சென்னையில் தமிழக அரசின் சார்பில், "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட்' என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இதுவரை பல ஆயிரக்கணக்கானவர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், கனடா, அயர்லாந்து, சவுதி அரேபியா, குவைத், சூடான், வங்கதேசம், பிரான்ஸ், ஓமன், பக்ரைன், லிபியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்நிறுவனத்தை நேரடியாக அணுகி, தங்களுக்கு தேவையான ஆட்கள் குறித்து தகவல்களைத் தருகின்றன.ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் செல்வோருக்கு 100 சதவீதம் பாதுகாப்பு உண்டு.

இது குறித்து இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் முறைப்படி ஆட்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறோம். வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புவோர், முதலில் எங்கள் நிறுவனத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்கள் தேவை என்று எங்களிடம் கேட்கும். அப்போது, அதற்கு தகுதியுடையவர்களை அங்கு அனுப்பி வைக்கிறோம். மேலும், வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து, அதன் மூலமும் ஆட்களை எடுத்தும் அனுப்புகிறோம். எங்கள் நிறுவனத்தின் மூலம் செல்வோர், "எம்ப்ளாய்மென்ட் விசா' உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற உதவுகிறோம். தனியார் நிறுவனங்கள் இந்த சேவைக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறுகின்றன. நாங்கள், 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூல் செய்கிறோம். எங்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்வோர்க்கு பாதுகாப்பு 100 சதவீதம் உத்தரவாதம்' என்றார்.

தொடர்பு கொள்ளலாமே!
சம்பளம், பாதுகாப்பு உத்தரவாதத்துடன் வெளிநாடு செல்ல விரும்புவோர், தமிழக அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தை அணுகலாம். அனைத்து பணிகளுக்கும் இந்நிறுவனம் ஆட்களை அனுப்புகிறது.இந்நிறுவனம் தற்போது சென்னை, அடையார், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, வீட்டு வசதி வாரிய வளாக முதல் தளத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை 044 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி : தினமலர் 

Friday, October 14, 2011

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்


பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.


தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.
நன்றி : தினமலர்