Friday, January 14, 2011

பஞ். ஊழியர் தற்கொலை- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

சுரண்டை: சுரண்டை அருகே பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். 

நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள ராஜகோபாலபேரி சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ரத்னசாமி மகன் அருமைராஜ். அங்குள்ள பஞ்சாயத்தில் மக்கள் நல பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 5 தினங்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அருமைராஜ் வீட்டிலிருந்து நெல்லை கலெக்டருக்கு அவர் அனுப்பிய கடிதத்தின் நகல் கைப்பற்றப்பட்டது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது,

நான் ராஜகோபாலபேரியில் மக்கள் நல பணியாளராக சேர்ந்து ஒரு வருடமாகிறது. தற்போது வீராணம் கால்வாயில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இங்கு தினமும் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பல முறைகேடு நடந்து வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர் ஜான் மற்றும் உதவியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு இதில் சம்பந்தம் உண்டு. இந்த முறைகேடுகளுக்கு நான் தான் காரணம் என என்னை மிரட்டி கடிதம் எழுதி வாங்கி வைத்துள்ளனர். 

இவர்களுடன் சேர்ந்து மோசடி புகாரில் சிக்குவதை விட நானே எனக்கு தண்டனை கொடுக்கும் விதமாக தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜான் மற்றும் உதவியாளர் நவநீதிகிருஷ்ணன் ஆதியோர் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து அருமைராஜை தற்கொலைக்கு தூண்டியதாக பஞ்சாயத்து தலைவர் ஜான், உதவியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மீது சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று காலை மாவட்ட காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் முத்தையா, பிரதிநிதி சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் பொன்மோகன்ராஜ் உள்பட 1000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு கருப்பு பேட்ஜ் அணிந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். 

முன்னதாக ராஜகோபாலபேரியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்குள்ள நடுநிலைப்பள்ளிக்கு நேற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது

ராஜகோபாலப்பேரி பஞ்.,மக்கள்நலப்பணியாளர் தற்கொலை வழக்கு: பஞ்.,தலைவர் கைது

வீரகேரளம்புதூர்:ராஜகோபாலப்பேரி பஞ்., மக்கள் நலப்பணியாளர் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பஞ்., தலைவர் கைதானார்.வீரகேரளம்புதூர் அருகிலுள்ள ராஜகோபாலப்பேரி பஞ்.,சில் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றியவர் அருமைராஜ். இவர் கடந்த 12.11.2010 அன்று தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையின் போது சிக்கிய கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜான் மற்றும் உதவியாளர் துரை என குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 21.12.2010 அன்று பஞ்., உதவியாளர் துரையை போலீசார் கைது செய்தனர். பஞ்., தலைவர் ஜானை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீராணம் அருகிலுள்ள கருவந்தா விலக்கில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த ஜானை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.இன்ஸ்பெக்டர் ஜமால் ஜானை செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர் செய்தார். பின்னர் அவர் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வீ.கே.புதூர் நூலகவாசகர் வட்ட கூட்டம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் நூலக வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வாசகர் வட்ட தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். நூலக பணியாளர் வேலம்மாள் வரவேற்றார். நூலகத்திற்கு கூடுதல் புத்தகங்களை வழங்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் புதிய வாசகர்களை ஏற்படுத்தவும், நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதிய புரவலர்களை சேர்க்க முயற்சி மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் செண்பகம் புதிய புரவலராக சேர்ந்தார். வாசகர்கள் வக்கீல் சுப்பையா, வெள்ளப்பாண்டி, ஜெபா, முருகன், பணியாளர்கள் சாந்தி, புனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.நூலகர் ஆறுமுகசாமி நன்றி கூறினார்.

வீ.கே.புதூர் தாலுகா பகுதியை தனி ஒன்றியமாக அறிவிக்க கோரிக்கை

சுரண்டை : ஆலங்குளம் ஒன்றிய வட பகுதியாகிய வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியை தனி ஒன்றியமாக அறிவிக்க திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் ஒன்றிய வட பகுதியில் வீரகேரளம்புதூர் தாலுகாவில் உள்ள 5 பஞ்., பகுதிகளையும், கடையநல்லூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள 2 பஞ்.,களையும், சங்கரன் கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் பிர்கா பகுதியிலுள்ள பஞ்.,களையும் இணைத்து இப்பகுதி மக்களின் நலன்கருதி இக்கிராமங்களுக்கு மைய பகுதியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய ஒன்றியம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும் வறட்சியின் பிடியில் வாழ்நாள் முழுவதும் சிக்கி வறண்டு தத்தளிக்கும் இப்பகுதிக்கு நீர் ஆதாரம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பகுதியிலுள்ள அனைத்து கிராம மக்கள் தென்காசி, சுரண்டை, வீரகேரளம்புதூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்றுவர போதிய பஸ் வசதி செய்து தரவேண்டும் என மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

வீ.கே.புதூர் பஞ்.,தலைவருக்கு விருது

வீரகேரளம்புதூர் : உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்தமைக்காக வீரகேரளம்புதூர் பஞ்., தலைவருக்கு நட்சத்திர சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டு நல்வாழ்வு சங்கம் என்ற அமைப்பு மாநில அளவில் கிராம ஊராட்சிகளில் குடிதண்ணீர் வசதி, பொது சுகாதாரம், கழிவுநீர் வெளியேற்ற வாறுகால் வசதிகள், கழிப்பிட வசதி, சுற்றுச்சூழலை காக்கும் ஏற்பாடுகள் முதலான அடிப்படை வசதிகளை திறம்பட செயல்படுத்தும் பஞ்.,களை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டிற்கான இச்சங்கத்தின் விருதுகள் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.இவ்விழாவில் உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்த வீரகேரளம்புதூர் பஞ்., தலைவர் மருதப்பபாண்டியன் (எ) பாபுராஜாவிற்கு நட்சத்திர சாதனையாளர் விருதிற்கான கேடயமும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐகோர்ட் நீதிபதி வள்ளிநாயகம் இவற்றை வழங்கி கவுரவித்தார்.விழாவிற்கு தேசிய ஒருமைப்பாட்டு நல்வாழ்வு சங்கத்தின் இயக்குநரும், தலைவருமான பெரியாண்டவர் தலைமை வகித்தார். மனித உரிமைகள் கழகத்தின் மாநில தலைவர் சீமான் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சேரன்மகாதேவி பஞ்.,தலைவர் பாபநாசம், திமுக முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சேசுராஜன், வீரகேரளம்புதூர் பஞ்., துணைத் தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்க ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.விருத பெற்ற பஞ்.,தலைவர் பாபுராஜா கடந்த ஆண்டு இந்திய கலாச்சார கவுன்சிலின் சார்பில் சிறந்த பஞ்.,தலைவருக்கான கிராமிய ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜகோபாலப்பேரி பஞ்.,மக்கள்நலப்பணியாளர் தற்கொலை வழக்கு பஞ்.,உதவியாளர் கைது

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகேயுள்ள ராஜகோபாலப்பேரி பஞ்.,மக்கள் நலப்பணியாளர் தற்கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பஞ்., உதவியாளர் கைது செய்யப்பட்டார்.ராஜகோபாலப்பேரி பஞ்.,சில் மக்கள் நலப்பணியாளராக பணிபுரிந்தவர் அருமைராஜ் (30). இவர் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் இவரது உடலை எரித்துவிட்டனர். தவகல் அறிந்த போலீசார் உறவினர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையின் போது இவர்தன் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜான் மற்றும் உதவியாளர் நவநீதகிருஷ்ணன் (எ) துரை ஆகியோர் கிராம பஞ்.,சின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடு செய்ய தன்னை வற்புறுத்தி பணிய வைத்ததாகவும், பின்னர் இந்த முறைகேடுகளுக்கு தான் மட்டுமே காரணம் என மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பஞ்., தலைவர் மற்றும் உதவியாளர் மீது சுரண்டை இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடிவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றபோது கலிங்கப்பட்டி விலக்கு அருகே நின்று கொண்டிருந்த பஞ்., உதவியாளர் நவநீதிகிருஷ்ணன் (எ) துரையை கைது செய்து செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும்

வீரகேரளம்புதூர்: வீரகேரளம்புதூர் தாலுகாவில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரசின் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார். பொங்கல் பண்டிகையன்று பொங்கல் வைக்க அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், 100 கிராம் பாசிப்பருப்பு, 10 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தலா 5 கிராம் ஆகியவை அடங்கிய பொருட்கள் தமிழக அரசின் மூலம் இலவசமாக ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. இவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் பாக்கெட் செய்யப்பட்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பபட்டுள்ளது. வீரகேரளம்புதூர் தாலுகாவில் அரசு ஆணையின்படி எப்பொருளும் வேண்டாத "என்' ரேசன் கார்டுகள் உட்பட நடப்பில் உள்ள 34 ஆயிரத்து 303 ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் இலவச பொருட்கள் வழங்கப்படும். டிசம்பர் மாதம் இறுதி வரையிலும் வழங்கப்படும் புதிய ரேஷன் கார்டுகளுக்கும் இவை வழங்கப்படும். இவ்வாறு மாநில உணவு பொருள் வழங்குதுறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் பாலச்சந்திரன் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாக வீரகேரளம்புதூர் வட்ட வழங்கல் அலுவலர் சேதுராமலிங்கம் தெரிவித்தார்

வீ.கே.புதூர் தாலுகா அலுவலகம் முன் வேகத்தடை அமைக்க கோரிக்கை

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன் வேகத்தடை அமைத்து விபத்தினை தடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீரகேரளம்புதூர் வளர்ந்து வரும் தாலுகா தலைநகராக உள்ளது. தினமும் ஆயிரக்ககணக்கான மக்கள் தாலுகா அலுவலகத்திற்கும், வீரகேரளம்புதூர், ஆலங்குளம் தாலுகா பகுதி அரசு அலுவலர்கள் கணக்கு வைத்துள்ள கனரா பாங்கிற்கும் மற்றும் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரி, அண்ணாசாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், புனித அந்தோணியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனம் முதலான கல்வி நிறுவனங்களுக்கும், போலீஸ் ஸ்டேஷனிற்கும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இரு சக்கர வாகனங்கள், தனியார் பால் பதனிடும் தொழிற்சாலைக்கு பால் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பஸ் மற்றும் பிற வாகனங்கள் விரைவாக வந்து தாலுகா அலுவலகத்தின் முன் திரும்புவதால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தாலுகா அலுவலகத்தின் முன்பாக ரோட்டின் இரு இடங்களிலும், தாயார் தோப்பு ரோட்டின் முகப்பிலும் வேகத்தடைகள் அமைத்து விபத்தினை தடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் வீரகேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் முன்பாக அமைக்கபட்டுள்ள இரண்டு வேகத்தடைகளும் விரைந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வண்ணம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவற்றின் மீது வெள்ளை வர்ணம் பூசி, வேகத்தடை எச்சரிக்கை போர்டும் வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.