Wednesday, March 28, 2012

மாவோயிஸ்ட் தாக்குதலில் ஊத்துமலை ராணுவீரர் பலி


வீரகேரளம்புதூர் :ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் பலியான ஊத்துமலை ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் ஊத்துமலையை சேர்ந்தவர் கொடிகாத்தகுமரன் (எ) குமரன் (27). தேசப்பற்று மிகுந்த இவரது தந்தை கருப்பையா தனது மகன் குமரனை கடந்த ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு அனுப்பினார். மாவேயிஸ்ட் தீவிரவாதிகள் நிறைந்த ஒடிசா மாநிலம் சுக்லா மாவட்டம் பீஜி பகுதியில் அவரது குழுவினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களது முகாமின் மீது கடந்த 26ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் குமரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவல் ஊத்துமலையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து உறவினர் மட்டுமின்றி கிராமமே கவலையில் ஆழ்ந்தது. இன்று (28ம் தேதி) காலை அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கார் மூலம் மாலை 3.30 மணிக்கு ஊத்துமலைக்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தென்காசி ஆர்.டி.ஓ.ராஜகிருபாகரன், வீ.கே.புதூர் தாலுகா மண்டல தாசில்தார் வெலன்சியா சில்வேரா, புளியங்குடி டி.எஸ்.பி.ஜமீம், ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர், சிஆர்பிஎப் கமாண்டர் பிஜி லாசர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து உடல் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு 24 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டர் பிஜிலாசர், டெபுடி கமாண்டர் நடராஜன், நெல்லை மாவட்ட ஆயுதப்படை எஸ்.ஐ.வேலாயுதம், வருவாய் ஆய்வாளர்கள் மாரியப்பன், சுப்பிரமணியன் உட்பட ஏராளமான அரசு உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக சோகத்தில் மூழ்கிய ஊத்துமலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கிராமம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் முருகையாபாண்டியன் தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. குமரனின் உடலை வேனில் இருந்து இறக்கிய போதும், ஊர்வலமாக எடுத்துச் சென்ற போதும் பொதுமக்கள் "பாரத் மாதாவுக்கு ஜே' என்ற கோஷம் எழுப்பியது ஒற்றுமை உணர்வை பிரதிபலித்தது.
நன்றி : தினமலர் 

Wednesday, March 21, 2012

அடிப்படை வசதிகள் இன்றி வீ.கே.புதூர் நூலகம்

வீரகேரளம்புதூர்:போதிய அடிப்படை வசதிகள் இல்லாத வீரகேரளம்புதூர் பொது நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றித்தர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தாலுகா தலைநகரமான வீரகேரளம்புதூரில் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரி, அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசினர் தொழிற்பயிற்சி மையம், யூனியன் துவக்கப்பள்ளி, ஆர்.சி.துவக்கப்பள்ளி, அண்ணா துவக்கப்பள்ளி உட்பட ஒன்பது கல்வி நிறுவனங்களும், தாலுகா அலுவலகம், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், தபால் அலுவலகம், சார்நிலை கருவூலம், கனரா வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
இங்கு பயிலும் மாணவ, மாணவிகளும், பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் பெரிதும் பயன்படுத்தும் பொது நூலகம் இங்கு உள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 12 புரவலர்கள், ஜெராக்ஸ் மெஷின், ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் இணையதள சேவை ஆகியன உள்ளன.ஆனால் இந்நூலகத்தில் மழை பெய்தால் நீர் கசிவும், மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் தரை தளம், பாதுகாப்பிற்கு தகவுகளில்லாத சிமென்ட் கிராதி ஜன்னல்கள், 500 சதுரஅடி அளவில் குட்டையான கட்டடம் என போதிய அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது.

வீரகேரளம்புதூர் மட்டுமின்றி அருகிலுள்ள தாயார்தோப்பு, ராஜபாண்டி, வெள்ளகால், இடையர்தவணை, செம்புலிப்பட்டணம், ராஜகோபாலப்பேரி, வீராணம், அதிசயபுரம், கலிங்கப்பட்டி, ராமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்நூல் நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக நூல் நிலையத்தை வேறு கட்டடத்திற்கு மாற்றித்தர வேண்டும். இதன் அருகிலேயே வேறு துறைகளுக்கு சொந்தமான பல கட்டடங்கள் கட்டியும் பலனில்லாமல் மூடிக்கிடக்கின்றன. அவற்றில் ஒன்றிலாவது மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
நன்றி : தினமலர் 

Thursday, March 15, 2012

வீ.கே.புதூரில் இருந்து நெல்லை மதுரைக்கு நேரடி பஸ்கள் இயக்க கோரிக்கை


வீரகேரளம்புதூர் :வீரகேரளம்புதூரிலிருந்து நெல்லை, மதுரை, சங்கரன்கோவிலுக்கு நேரடியாக பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாலுகா தலைநகரான வீரகேரளம்புதூருக்கு தாலுகா அலுவலகம், வங்கி சேவை, சார்நிலை கருவூலம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக தாலுகாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கல்வி கற்பதற்காகவும், கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்காகவும் இங்கிருந்து நெல்லைக்கும், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். ஏராளமான வியாபாரிகள் மதுரைக்கும் சென்று வருகின்றனர்.

ஆனால் இங்கிருந்து நெல்லை, சங்கரன்கோவில், மதுரைக்கு நேரடி பஸ் வசதி இல்லை. புளியங்குடியிலிருந்தோ, சுரண்டையிலிருந்தோ வருகின்ற பஸ்களில் தள்ளுமுள்ளு செய்து ஏறி நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையே உள்ளது. இதில் பெண்கள் மற்றும் பெரியோர்களின் பாடு பெரிதும் திண்டாட்டம்தான். சங்கரன்கோவில் செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் சுரண்டை சென்று அங்கிருந்து பின்னர் சங்கரன்கோவிலுக்கு பஸ் ஏற வேண்டும். இதனால் பொதுமக்களின் பணமும், நேரமும் வீணாகிறது. 30 கி.மீ. தூரத்திலுள்ள சங்கரன்கோவிலுக்கு சென்றுவர ஒருநாள் முழுவதும் வீணாகிறது.
எனவே வீரகேளம்புதூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வீரகேரளம்புதூரிலிருந்து நெல்லை, சங்கரன்கோவில், மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு நேரடி பஸ் சேவையை துவக்க வேண்டும். தாயார்தோப்பு, ராஜபாண்டி, வெள்ளகால் வழியாக தென்காசிக்கும் பஸ் வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தினமலர்