Sunday, December 30, 2012

விபத்தில் பலியான பெண் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை * வீ.கேபுதூர் அருகே பரபரப்பு

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகே பைக் விபத்தில் இறந்து போலீசாருக்குத் தெரியாமல் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

வீரகேரளம்புதூரை அடுத்த செம்புலிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி பாப்பு (60). இவர் மீது துத்திகுளத்தைச் சேர்ந்த தங்கராஜ் (37) என்பவரது பைக், மோதியதில் கீழே விழுந்து தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது.

பாளை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாப்பு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி இறந்தார். அவருடைய உடலை செம்புலிப்பட்டணத்திற்குக் கொண்டு வந்த உறவினர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்துவிட்டனர்.
தற்போது இது குறித்து தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் தாசில்தார் குருச்சந்திரன், சுரண்டை இன்ஸ்பெக்டர் சார்லஸ் கலைமணி முன்னிலையில் பாப்புவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டது.

இச்சம்பவம் வீரகேரளம்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமலர் 

Sunday, December 16, 2012

வீ.கே.புதூரில் பயனாளிகளுக்கு எம்எல்ஏ., நலத்திட்ட உதவி வழங்கல்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவில் எம்எல்ஏ சரத்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக நலத்துறையின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குழந்தைசாமி வரவேற்றார். தாசில்தார் குருசந்திரன், வீரகேரளம்புதூர் பஞ்., தலைவர் பாபுராஜா (எ) மருதப்பபாண்டியன், மாவட்ட ச.ம.க., செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி எம்எல்ஏ., சரத்குமார் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பஞ்., தலைவர்கள் கீழக்கலங்கல் இந்திராணி, மேலக்கலங்கல் சரவணவேல்முருகையா, வீராணம் பொன்பாண்டியன், கருவந்தா நளினி, ச.ம.க., மாவட்ட துணை செயலாளர்கள் துரை, கண்ணன், மாவட்ட அதிமுக., எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் சண்முகவேலு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நன்றி : தினமலர் 

Monday, December 10, 2012

வீ.கே.புதூர் தாலுகாவில் நிறுத்தப்பட்ட பஸ்கள் உடனடி இயக்க வலியுறுத்தல்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரிலிருந்து கழுநீர்குளம் வழியாக இயக்கப்பட்ட அனைத்து பஸ்களையும் மீண்டும் இயக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துமலையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்படலாம் எனக்கருதி, வீரகேரளம்புதூரிலிருந்து கழுநீர்குளம் வழியாக ஆலங்குளம், நெல்லைக்குச் செல்லும் அனைத்து பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் அன்றாட அலுவல்களுக்கு சிரமமில்லாமல் பஸ் பயணத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி கழுநீர்குளம் அருகே அரசு பஸ்மீது கல்வீசி கண்ணாடி சேதமடைந்ததாக, ஓட்டுனர் வீரகேரளம்புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து, கல் வீசியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பஸ் போக்குவரத்து இல்லாததால், வீராணம், வீகேபுதூர், ராமனூர், கலிங்கப்பட்டி, தாயார் தோப்பு, ராஜபாண்டி, கழுநீர்குளம், முத்துக்கிருஷ்ணபேரி, அத்தியூத்து, கல்லூத்து, துத்திகுளம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் வரை அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வீ.கே.புதூரில் உள்ள அரசு ஐடிஐ, மற்றும் பள்ளிகளுக்கு வெளியூர்களிலிருந்து வரும் மாணவ, மாணவியர் பெரும்பாலும் நடந்தே வருகின்றனர். ஆட்டோக்களில் வருவதற்கு ஆலங்குளத்திலிருந்து வீகேபுதூர் வரையிலான பத்து கிமீ தூரத்திற்கு அதிகமான கட்டணம் வசூலிக்கின்றனர். கூடுதல் கேட்கப்படுகின்ற தொகையைத் தரமுடியாமல் பொதுமக்கள் ஆட்டோக்களிடம் தகராறு செய்கின்ற சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, பொதுமக்களின் நலன் கருதியும் மாணவர்களின் கஷ்டங்களை போக்கவும், நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களையும் உடனடியாக இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி : தினமலர் 

Wednesday, September 26, 2012

வீ.கே.புதூர் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார்.வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியில் அனுமதியின்றி சிற்றாற்றில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தவகலை தொடர்ந்து தென்காசி ஆர்.டி.ஓ. ராஜகிருபாகரன் ஆலோசனையின் பேரில் தாசில்தார் குருச்சந்திரன் தலைமையில் பறக்கும்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் துணை தாசில்தார் லெவன்சியா சில்வேரா, வருவாய் ஆய்வாளர் சங்கரன், கிராம நிர்வாக அலுவலர் முருகையா ஆகியோர் தாயார்தோப்பு அருகே ரோந்து சென்றனர். அப்போது சிற்றாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு வந்த டிராக்டரை மடக்கினர். டிராக்டர் டிரைவர் தப்பியோடிவிட்டார். வீரகேரளம்புதூர் போலீசார் உதவியுடன் டிராக்டர் பறிமுதல் செய்து தாலுகா வளாகத்தில் நிறுத்தப்பட்டது.மேலும் அகரம் அணைக்கட்டு பகுதியிலிருந்து அள்ளி வயல் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலும் கைப்பற்றப்பட்டது. மணல் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தாசில்தார் குருச்சந்திரன் தெரிவித்தார்.
நன்றி : தினமலர் 

Monday, September 24, 2012

இந்தியாவில் சில்லரை வர்த்தகம்

இந்தியாவில், ஆண்டுக்கு 25.65 லட்சம் கோடி ரூபாய்க்கு சில்லரையில் வர்த்தகம் நடக்கிறது என, பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டு உள்ளனர்.இதில், மளிகை பொருட்கள், ஆடைகள், காலணிகள், நகைகள், "வாட்ச்' போன்ற தனிநபர் நுகர்வு பொருட்கள், அழகு சாதனங்கள், மருந்துகள், புத்தகங்கள், அறைகலன்கள், பாத்திரங்கள், பேன், லைட், பிரிட்ஜ் உட்பட மின் சாதனங்கள்; கணினி, செல்போன் உட்பட மின்னணு பொருட்கள், புகையிலை பொருட்கள், சில்லரை கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் சில்லரை வர்த்தகம் அடக்கம்.


பெரிய கடைகள்:

இப்படி, பரந்து விரிந்த சில்லரை வர்த்தக தொழிலில், பல இடங்களில் கடைகளை நடத்தும் பெரிய நிறுவனங்களின் பங்கு வெறும் ஆறு சதவீதம் தான் என, வர்த்தக கூட்டமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில், மளிகை பொருட்கள் தவிர, மற்ற பொருட்களின் வர்த்தகத்தில், பெரிய நகரங்களை பொருத்த வரை பெரிய நிறுவனங்கள் தான் கோலோச்சி வருகின்றன.ஒவ்வொரு மாநிலத்திலும், போத்தீஸ், சென்னை சில்கஸ், கல்யாண் குழுமம், அலுக்காஸ் குழுமம், போன்ற பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அவை தற்போது, அண்டை மாநிலங்களிலும், தங்கள் கிளைகளை துவக்கி வருகின்றன. லைப்ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லேண்ட்மார்க், வெஸ்ட் ஸைட், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் பல மாநிலங்களில் கடைகளை நடத்தி வருகின்றன.இவற்றை விற்பனை செய்யும் சிறிய கடைகள் இருந்து வந்தாலும், அவற்றை அந்தந்த பகுதி மக்கள் மட்டுமே நாடுகின்றனர். இதனால், பெரிய நகரங்களில், சிறிய கடைகளின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது.மளிகை பொருட்களை பொறுத்தவரை, நீலகிரீஸ், ரிலையன்ஸ் பிரஷ், ஸ்பென்ஸர்ஸ், மோர் போன்ற பெரிய கடைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தி, வளர்ந்து வருகின்றன.இதனால், பல கிளைகள் கொண்ட பெரிய கடைகளின் வரவோ, விரிவாக்கமோ, நம் நாட்டில் புதிதல்ல.

மளிகை பொருட்கள்:

மொத்த சில்லரை வர்த்தகத்தில், மளிகை பொருட்களின் பங்கு 61 சதவீதம்.மளிகை வர்த்தகத்தில், பெரிய நிறுவனங்கள் இருந்து வந்தாலும், இவை, பெரிய அளவில் ஊடுருவவில்லை. இதனால், சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களின் பங்கில், மளிகை பொருட்களின் பங்கு 18 சதவீதம் தான் என, தேசிய வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) தெரிவிக்கிறது. அதாவது, மொத்த சில்லரை வர்த்தகத்தில் ஒரு சதவீதம் தான்.மேலும், நபார்டின் கணிப்புப் படி பெரிய நிறுவனங்களின் மளிகை வர்த்தகத்தால், சிறிய கடைகளின் விற்பனை குறையவில்லை என, தெரிகிறது.இதற்கு, சிறிய கடைகள் வழங்கும் கடன் வசதி, சிறிய அளவிலான விற்பனை, வீட்டிற்கு பொருட்களை கொண்டு தரும் வசதி, ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. 60 சதவீதம் நுகர்வோர், காய்கறிகள், பழங்கள், முட்டை, பால், இறைச்சி போன்றவற்றை, அவரவர் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் வாங்குவதையே விரும்புவதாக நபார்டு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.தற்போது, மளிகை வர்த்தகத்தில், பெரிய கடைகள் ஏற்படுத்தியுள்ள குன்றிய தாக்கம் மற்றும் நுகர்வோரின் விருப்பங்களை கணக்கில் கொள்ளும் போது, வெளிநாட்டு நிறுவனங்கள், சிறிய கடைகளுக்கு, உடனடியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ரூ.224.50 லட்சம் கோடி!

டிலாய்ட் பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், "க்ளோபல் பவர்ஸ் ஆப் ரீடெய்லிங்க்' என்ற அறிக்கையை வெளியிடுகிறது. இதில், உலகில் சில்லரை வர்த்தகத்தில் முன்னிலையில் இருக்கும் 250 நிறுவனங்கள் பற்றி ஆய்வு விவரங்கள் வெளியிடப்படுகின்றன.
2012ம் ஆண்டிற்கான, இந்த அறிக்கையின் விவரங்கள் படி;
*உலகின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனங்களின், ஒரு ஆண்டிற்கான, மொத்த விற்பனை - 224.50 லட்சம் கோடி ரூபாய்
*இதில், 52.50 லட்சம் கோடி ரூபாய் விற்பனை, இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் நடத்தும் கடைகளில் இருந்து வந்தது.
*ஒவ்வொரு நிறுவனத்தின் சராசரி ஆண்டு விற்பனை - 89,860 கோடி ரூபாய்
*250 முன்னணி நிறுவனங்களில், 147 நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடைகள் வைத்துள்ளன.
முனணியில் உள்ள 

10 நிறுவனங்கள்

நிறுவனம் தாய் நாடு செயல்படும் நாடுகள்

வால்மார்ட் அமெரிக்கா 16
கேரேபோர் பிரான்ஸ் 33
டெஸ்கோ இங்கிலாந்து 13
மெட்ரோ ஜெர்மனி 33
தி குரோகர் கோ. அமெரிக்கா 1
ஷ்வார்ஸ் ஜெர்மனி 26
காஸ்ட்கோ அமெரிக்கா 9
தி ஹோம் டிப்போ அமெரிக்கா 5
வால்கிரீன் அமெரிக்கா 2
ஆல்டி ஜெர்மனி 18


கோலி சோடாவிற்கு வால்மார்டில் இடம் கிடைக்குமா?

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், தமிழகத்தில் மட்டும், 22 லட்சம் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், உள்ளூர் தயாரிப்புக்கள் எல்லாம், மறைந்து அன்னிய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை மட்டும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற, கருத்து முன் வைக்கப்படுகிறது.வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் பற்றி கவலைப்படாமல், சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை நேரடியாக அனுமதிக்கும் முடிவை, மத்திய அரசு எடுத்து உள்ளது. இதனால், பொருட்களின் விலை குறையும், தரமான பொருட்கள் கிடைக்கும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது ஏமாற்று வேலை எனவும், இது சிறு வணிகர்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக முடக்கும் செயல் என, வணிகர்கள் சங்கங்கள் கொதிப்படைந்துள்ளன. இது குறித்து, அனைத்து தரப்பு விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து பார்ப்போம்...

உள்ளூர் தயாரிப்புகள் காணாமல் போகும்:

த.வெள்ளையன்தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை :
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், உள்ளூர் தயாரிப்புகள் காணாமல் போகும். கொக்ககோலா, பெப்சி போன்றவை வந்து, உள்ளூர் தயாரிப்பு பானங்கள் காணாமல் போனதே உதாரணம்.அன்னிய நிறுவனங்கள், அதிக பட்ச முதலீடு, அதிரடி விளம்பரம், அரசியல் உதவிகள், அநியாய வியாபாரம் என்ற கொள்கையுடன் தான் வருகின்றன.போட்டியாளர்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளை திட்டமிட்டு அழிப்பர். உள்ளூர் தயாரிப்புக்களை மொத்தமாக வாங்கி, அதை புழக்கத்தில் விடாமல் முடக்கி, அழித்துவிட்டு, அவர்களின் தயாரிப்புக்களை விற்பனை செய்வர். உற்பத்தி பொருட்களை, ஒட்டுமொத்தமாக நேரடி கொள்முதல் செய்வர். உள்ளூர் வியாபாரிகளுக்கு தர மாட்டார்கள்.இதனால், குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கச் செல்லும் பொதுமக்கள், காய்கறி முதல் கார் வரை எல்லாம் கிடைக்கும் என்ற விளம்பரத்தால், எல்லா பொருட்களையும் அங்கேயே வாங்க விரும்புவர்.இதனால், தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகும் சில்லரை வர்த்தகத்தின் மூலம் பயன்பெற்று வரும், 40 லட்சம் வியபாரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்.உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்து, அப்படியே விற்பதால், விலை குறையும் என, பிரதமர் கூறுகிறார். இது அறிவு சார்ந்த கருத்து அல்ல. உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், அவற்றை கிடங்குகளில் பதுக்கி, உலக அளவில் வர்த்தகம் செய்வதால், விலை அதிகம் கிடைக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.பிற இடங்களில் உள்ள மட்டமான பொருட்கள் இங்கு இறக்குமதியாகும். தரமில்லாத பொருட்களையும் மக்கள், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும். இதனால், சில்லரை வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிக்கப்படுவர். மத்திய அரசு, இதை தடுக்காது. அமெரிக்காவின் உத்தரவுக்கு பணிந்து, மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை எதிர்க்க வேண்டியது நமது கடமை.

சில்லரை வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக முடங்குவர்:

விக்கிரமராஜா தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு :
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், காய்கறி சந்தைகள், சிறிய உணவகங்கள் எல்லாம் இழுத்து மூடப்படும். வால்மார்ட் போன்ற, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும். வால்மார்ட் நிறுவனம், 27 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் வர்த்தகம் செய்கிறது.இந்த நிறுவனம், சீசன் கால பொருட்களை ஒட்டுமொத்தமாக வாங்கும். தமிழதத்திற்கு ஆண்டுக்கு, 5,000 டன் நெல் தேவையெனில், விவசாயிகளிடம், அதை ஒரே நாளில் கொள்முதல் செய்யும். விலை குறைவாக இருந்தாலும், கையில் உடனே பணம் கிடைக்கிறதே என, விவசாயிகளும் உற்பத்திப் பொருட்களை தர முன் வருவர். காய்கறி உள்ளிட்ட எல்லா உற்பத்திப் பொருட்களும் அவர்களிடம் செல்வதால், சந்தைக்கு வராது.இந்த சந்தைகளால் பயனடையும் , 22 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆரம்பத்தில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கும் அன்னிய நிறுவனங்கள், சில ஆண்டுகளில் சில்லரை வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக முடங்கியதும், உள்ளூர் தயாரிப்புக்கள் வாங்குவதை முற்றிலும் கைவிடுவர். ஏற்கெனவே, நம் பகுதியில் தயாரித்த, கோல்ட் ஸ்பாட், வின்சென்ட், போன்ற குளிர் பானங்கள் காணாமல்போய், பெப்சி, கோக் போன்றவற்றின் ஆதிக்கம் வந்துள்ளதே உதாரணம். வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால், தமிழகத்தில், எல்லா நிலைகளிலும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை தடுத்து வியாபாரிகளும், மக்களும் போராட வேண்டும்.

விவசாயிகளுக்கும் பாதிப்பு வரும்

வேல்சங்கர் தலைவர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் :
கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை, அன்னிய நிறுவனங்கள் செய்து கொடுத்த பின்புதான், அன்னிய நிறுவனங்களை அனுமதிப்போம் என, மத்திய அரசு கூறுகிறது. வெளிநாடு தொழில்நுட்பங்களை வாங்கி, பல கோடி ரூபாயில் நாம் ராக்கெட் செலுத்துகிறோம். விவசாயிகளுக்கு கட்டமைப்பு செய்ய, அன்னியநிறுவனங்களை ஏன் அழைக்க வேண்டும்.நாட்டின்வளம் நம் கையில்தான் இருக்க வேண்டும். அன்னியர்களிடம் விடக்கூடாது. ஆரம்பத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்குவோர். நாளடைவில் விலையை பாதியாக குறைப்பர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். உற்பத்தியாளர்களை சார்ந்து தொழில் செய்த வியாபாரிகளும் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின் பொருளாதாரம் சீரழிந்ததுபோல், நம் நாடும் சீரழியும் நிலை வரும். அன்னிய முதலீட்டு அனுமதியை கைவிட்டு, விவசாயிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர, மத்திய அரசு முன் வரவேண்டும்.

"அன்னிய நிறுவனங்களின் இறக்குமதியால் விவசாயிகள் அழிந்துவிடுவர்':

டாக்டர். மோகன்செயலர், தமிழ்நாடு நெல், அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கங்களின் சம்மேளம் :சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பது வரவேற்புக்குறியது அல்ல. அது இந்திய விவசாயிகளின் பொருளாதாரத்தை பின்னோக்கி தள்ளிவிடும். அன்னிய முதலீட்டை எலக்ட்ரானிக், விமான போக்குவரத்து உள்ளிட்ட மற்ற எந்த துறையில் வேண்டுமானாலும் அனுமதிக்கலாம். ஏனெனில் அதில் நாம் பின் தங்கி உள்ளோம். ஆனால் உணவுப்பொருள் துறையில் அத்தகைய நிலை இல்லை.இந்தியாவில், 58.8 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். 20 கோடி வணிகர்கள் உள்ளனர். அன்னிய முதலீட்டை அனுமதித்தால் அவர்களின் வாழ்வாதாரம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படும்.அன்னிய முதலீடு உள்ளே வருவதால், 10 கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நடைமுறைக்கு உதவாத வாதம். அதனால், 20 கோடி பேர் சுய வேலை வாய்ப்பை இழந்து, அன்னிய முதலீட்டாளர்களிடம் வேலைக்காரர்களாக மாறும் நிலைதான் ஏற்படும்.இந்தியாவிற்குள் வரும் போது, குறைந்த விலையில் உணவுப்பொருட்களை கொடுக்கும் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், ஒரு சில மாதங்களில் தங்களின் சர்வாதிகாரத்தை செயல்படுத்துவர். அதன் மூலம் அவர்கள் நிர்ணயிக்கின்ற விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு நுகர்வோர் தள்ளப்படுவர். உதாரணத்திற்கு குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்களின் விலை உயர்வை நாம் அறிவோம்.மொத்தத்தில் அவர்கள் இந்திய விவசாயிகளிடம் பொருட்களை வாங்க மாட்டார்கள். உலக சந்தையில் குறைந்த விலைக்கு வாங்கி, இங்கு தங்களை வளர்த்துக்கொள்வர். இங்கு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நமது விவசாயிகள் நிர்ணயிக்கும் விலையை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது தான் அன்னிய முதலீட்டின் நிலை.

விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்

ஜெயக்குமார் தலைவர், சென்னை பெருநகர சரக்கு வாகனபோக்குவரத்து ஏஜென்டுகள் சங்கம்:அன்னிய முதலீட்டால் தொழில் வளர்ச்சி மேம்படும். இந்தியா விவசாய நாடுதான். ஆனால் அதற்குரிய வளர்ச்சி திட்டங்கள் மிகவும் குறைவு. அடிப்படையில் நான் ஒரு விவசாயி. இன்றும், 10 ஏக்கரில் மஞ்சள், கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு வருகிறேன் என்றாலும் நஷ்டத்தையே சந்திக்க வேண்டி உள்ளது.விளை பொருளை உற்பத்தி செய்யும் விவசாயி அதற்குரிய விலையை நிர்ணயம் செய்ய முடியாத வியாபார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நிலை மாறினால்தான் பொருளாதாரம் மேம்படும். ஆனால் இப்போது வரை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் இடைத் தரகர்கள்தான் அதிக லாபம் அடைகின்றனர். இதனால், 75 சதவீதம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் உள்ளது. அவர்களின் ஆதிக்கத்தால், உழைக்கின்ற விவசாயிகள் பலவீனமாகி விடுகின்றனர்.அவர்களின் உழைப்புக்கேற்ற வருவாய் கிடைப்பதில்லை. அதனால்தான் பலர் விவசாய நிலத்தை விற்று, வேறு தொழில்களுக்கு மாறிவிடுகின்றனர். விவசாய நிலங்கள் "கான்கிரீட்' காடுகளாக மாறி வருவதால் மழை குறைந்து, இயற்கை வளமும், பொருளாதாரமும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இங்கு வருவது வரவேற்கத்தக்கது. அவை, விளை பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் விவசாய பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அவற்றுக்குரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யும். மேலும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மானியம் மற்றும் கடனுதவிகளை அளித்து, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும். இது போன்ற மாற்றத்தால் நாட்டில் வேகமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

பாதிக்குமா? பாதிக்காதா?

சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு குறித்து, எக்கச்சக்க கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றிற்கு பதில்களை தேடுவோம்...

அன்னிய நிறுவனங்கள் வந்தால், அரசு கூறுவதுபோல், உணவு பொருட்கள் வினியோகத்திற்கான கட்டமைப்பு மேம்படுமா?
இந்தியாவில், காய்கறி, பழங்கள் போன்ற தோட்டக்கலை பயிர்கள், ஒவ்வொரு ஆண்டும், கட்டமைப்பு வசதி இல்லாததால், 30-40 சதவீதம் வரை விணாவதாக அரசின் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதில், குளிரூட்டு வசதிக்கான தேவைக்கும், இருப்புக்கும் மட்டும் உண்டான வித்தியாசம், 2.50 கோடி டன் என, கூறப்படுகிறது.அன்னிய நிறுவனங்கள் வந்தால், இந்த குளிரூட்டு வசதிகளை மேம்படுத்த முடியும், ஆனால், குளிரூட்டு வசதிகள் இந்த பயிர்கள் வீணாவதில் ஒரு பங்கு தான்.நிபுணர்கள் கருத்து படி, தோட்டக்கலை பயிர்களை, தோட்டத்தில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்லும் போது தான் பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது.இது, சாலைகள் மேம்பட்டால் மட்டுமே சரியாகும். அதனால், அன்னிய நிறுவனங்கள் இதில் பங்களிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.மேலும், இந்த வகையான கட்டமைப்புகளை உருவாக்குவது அரசின் பொறுப்பு. இதற்காக, எண்ணற்ற திட்டங்கள் வகுக்கப் பட்டு, சரியாக செயல்படுத்தப் படாததால், அவை தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த அளவிலானாலும், கட்டமைப்புகள் எந்த அளவிற்கு மேம்படும்?
நம் நாட்டில், மொத்த விற்பனையில், 100 சதவிதம் அன்னிய முதலீடு, 2006ம் ஆண்டு முதல், அனுமதிக்கப் படுகிறது. சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டிற்கு அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிந்து, அன்னிய நிறுவனங்கள் இங்கு ஏற்கனவே மொத்த விற்பனை தொழிலை துவங்கிவிட்டன.வால்மார்ட் நிறுவனம், "பெஸ்ட் ப்ரைஸ்' என்ற பெயரில், 17 இடங்களில் செயல்படுகிறது. ஜெர்மனியின் மெட்ரோ நிறுவனம், "மெட்ரோ கேஷ் அண்டு கேரி' என்ற பெயரில், 11 இடங்களில் செயல்படுகிறது. பிரான்ஸின் கேரேபோர் நிறுவனம், "கேரேபோர் ஹோல்சேல் கேஷ் அண்டு கேரி' என்ற பெயரில், டில்லி மற்றும் ராஜஸ்தானில் செயல்படுகிறது.அதாவது, பொருட்களை வாங்கி சேமித்து வைக்கும் நிர்வாக அமைப்புகள், கிடங்குகள் ஆகியவை உருவாக்கப்பட்டு விட்டன. கடைகளை தொடங்குவது மட்டும் தான் மிச்சம்.இவை, கடந்த ஆறு ஆண்டுகளாக உருவாகிய பின்பும், வேளான் பொருட்களின் வினியோக கட்டமைப்புகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.கால போக்கில் இவற்றை விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது. இருப்பினும் எந்த அளவிற்கு மேம்படும் என, தெரியவில்லை.

பெரிய நிறுவனங்களின் நேரடி கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு, நல்ல விலை கிடைக்கும் என, அரசு கூறுகிறதே உண்மையா?
இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள், விவசாயிகளின் சந்தைபடுத்தும் பலவீனத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர், என்பது பாட புத்தகங்களிலேயே உள்ள விஷயம்.தேசிய வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு), கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், ஸ்பென்ஸர் ரீட்டெயில் சூப்பர்மார்க்கெட்டுகளில் எடுக்கப்பட்ட தகவலின் படி, நேரடி கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு, 8 சதவீதம் வரை அதிக விலை கிடைப்பதாக தெரியவந்தது.உள்நாட்டில், பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் ஏற்கனவே நேரடி கொள்முதலில் ஈடுபட்டு உள்ளன. இது, அன்னிய நிறுவனங்கள் வந்தால் அதிகரிக்கும்.இது தவிர, நேரடி கொள்முதல் மூலம் வளை பொருட்கள் வீணாவது, 7 சதவீதம் வரை குறையும் என, நபார்டு கணக்கிட்டு உள்ளது. இதுவும், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை தரும்.

நேரடி கொள்முதலினால் ஏதாவது அபாயம் உள்ளதா?
நேரடி கொள்முதலில், பெரிய நிறுவனங்கள், விவசாயிகளிடம் குறிப்பிட்ட பயிர்களுக்கான ஒப்பந்தத்தை செய்து கொள்ளும். அதில், எத்தனை ஏக்கரில் பயிரிடப்பட வேண்டும், எவ்வளவு வேண்டும், பயிர்களின் ரகம், தரம், அளவு, நிறம் உள்ளிட்டவை குறிப்பிடப்படும்.அதாவது, சூப்பர்மார்கெட்டுகளில் பெரும்பான்மையானோர் வாங்குவதற்கு ஏதுவாக இந்த அளவுகோல்கள் உருவாக்கப்படும்.இதனால், பயிர் பன்மை பாதிக்கப்படும் அபாயம் உண்டு. கால போக்கில், இந்த ஒப்பந்தங்கள் அதிகரித்தால், மலை வாழைப்பழம், மாகாளி கிழங்கு போன்றவை, விவசாயிகளால் கைவிடப்படும் நிலை ஏற்படலாம். இதன் தாக்கம் தெரிவதற்கு பல ஆண்டுகளாகும். ஆனால், பெரிய நிறுவனங்கள் முழுமையாக, அனைத்து இடங்களுக்கும் ஊடுறுவினால் மட்டுமே இது நடக்கும்.மேலும், ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தகுந்த நிறத்திலோ, தகுந்த வளைவுடனான வாழைப்பழத்தை விளைவிக்காவிட்டாலோ, அந்த பயிர் ஏற்றுக்கொள்ளப் படாது. இதனால், சமயத்தில், விவசாயிகள் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது.

அன்னிய நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அனைத்து பொருட்களையும் மலிவு விலையில் இறக்குமதி செய்து, உள்ளூர் கடைகளை "போண்டி' ஆக்கிவிடுமா?
என்ன இறக்குமதி செய்தாலும், அது இந்திய அரசின் இறக்குமதி வரன்முறைகளுக்குள் தான் செய்ய முடியும். அதாவது, அன்னிய நிறுவனங்கள் எதை இறக்குமதி செய்தாலும், அதையே இந்திய நிறுவனங்களும் செய்வதற்கு எல்லா வசதிகளும் உள்ளன.அதனால், அன்னிய நிறுவனங்களால் எல்.சி.டி., டி.வி.,யின் விலை திடீரென 2,000 ரூபாய் குறைத்து விற்பனை செய்ய முடியாது. உலகமெங்கும், சாம்சங் போன்ற டி.வி., நிறுவனங்கள் தான் செயல்படுகின்றன. அதனால், அன்னிய நிறுவனங்களால், பெரும்பாலான பொருட்களில், உள்நாட்டு நிறுவனங்கள் வழங்காத அதிரடி சலுகைகளை வழங்க முடியாது.

சிறிய மற்றும் உள்நாட்டு கடைகள், அன்னிய நிறுவனங்களின் வருகையால் பாதிக்கப்படுமா?
சில்லரை வர்த்தகம் என்பது மளிகை பொருட்களின் வர்த்தகம் மட்டும் அல்ல (இந்தியாவில் சில்லரை வர்த்தகம் கட்டுரையை பார்க்கவும்). மளிகை பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கான வர்த்தகத்தில், உள்நாட்டு நிறுவனங்கள் நன்கு வளர்ந்துள்ளன. உதாரணத்திற்கு ஜவுளி, நகை   போன்ற பொருட்களின் வர்த்தகம்.அதனால், இவை அன்னிய நிறுவனங்களின் வருகையால் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.ஆனால், நம் நாட்டில், மொத்த சில்லரை வர்த்தகத்தில், மளிகை வர்த்தகம் தான் 61 சதவீதத்தை பிடித்து உள்ளது. இதில், பெரிய நிறுவனங்களின் பங்கு வெறும் ஒரு சதவிதம் தான். இதனால், அன்னிய நிறுவனங்கள் வந்தாலும், இது பெரிய அளவு அதிகரிக்குமா என்பது சந்தேகம் தான்.மேலும், நபார்டு ஆய்வின் படி, 60 சதவீதத்திற்கும் மேலான மத்தியதர வர்க்கத்தினர், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, சிறிய கடைகளையே விரும்புவதாக தெரியவந்து உள்ளது. (மேலும், தகவலுக்கு, வால்மார்ட் தோல்விகள் பகுதியை படிக்கவும்)இந்தியா பரந்து விரிந்த நாடு என்பதால், பெரிய நகரங்களில், அன்னிய நிறுவனங்களால், பாதிப்பு ஒரளவிற்கு ஏற்பட்டாலும், மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

சுய தொழில் பாதிக்கப்படுமா?
தேசிய மாதிரி மதிப்பீடு நிறுவனம், 2004-05ல் எடுத்த வேலை வாய்ப்பிற்கான மாதிரி மதிப்பீட்டின் படி, 3.50 கோடி பேர் சில்லரை வர்த்தக தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். நாட்டில், வேலைபார்க்கும் வயதில் உள்ளவர்களில், இது 7.30 சதவீதம்.நம் நாட்டை பொறுத்தவரை, குறைந்த முதல் வைத்து, சுலபமாக தொடங்கக் கூடிய சிறு தொழில் கடை வைப்பது தான்.ஏனெனில், பொருள் உற்பத்தி போன்ற தொழில்களுக்கு, அதிக முதல் தேவைப்படுவதோடு, அரசாங்கத்தின் எண்ணற்ற விதிகளாலும், ஊழலாலும், உற்பத்தி தொழிலில் இறங்குவது சற்று சிரமமான விஷயம் தான்.சில்லரை வர்த்தகத்தில், காலப் போக்கில், பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் முழுமையாகி விட்டால், சிறு கடைகள் போடுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். இதனால், முதலை கொஞ்சம் கொஞ்சமாக ஈட்டி வரும் சமுதாயங்களால், கடைகள் அமைத்து, தங்கள் சமுதாயத்தினரின் முதலை பெருக்குவதற்கான வாய்ப்பு குறையும் அபாயம் உள்ளது.
சிறு உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு பெரிய கடைகளில் இடம் கிடைக்குமா?
வீட்டிலேயே ஊறுகாய் போடுவோர், முறுக்கு சுற்றுபவர்கள், அப்பளம் தயாரிப்பவர்கள், கோலி சோடா தயாரிப்பவர்கள் என, நம் நாட்டில், சிறு, குறு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை ஏராளம். தற்போது, இவர்கள், சிறு கடைகள் மூலம் தங்கள் பொருட்களை விற்று வருகின்றனர். உள்நாட்டு "சூப்பர்மார்கெட்'டுகளில் இவர்களது பொருட்களுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை.அதே போல், வெளிநாட்டு நிறுவனங்களின் "சூப்பர்மார்கெட்'டுகளிலும் இவர்களது பொருட்களுக்கு இடம் கிடைக்காது. "சூப்பர் மார்க்கெட்' தொழிலின் ஆதிக்கம் முழுமையாகிவிட்டால், சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதில் சந்தேகம் இல்லை. பெப்ஸி, கோக்க கோலா, போன்ற குளிர்பானங்கள் வந்தபோதே கோலி சோடா மற்றும் உள்ளூர் குளிர்பானங்களின் விற்பனை அடிபட்டது. அது தொழில் போட்டி ரீதியான தோல்வி.ஆனால், வளர்ந்து வரும் ஒரு சந்தையில், பொருளை விற்க இடம் கிடைக்காதது வாய்ப்பு பறிக்கப்படுவதால் ஏற்படும் தோல்வி.என்னதான், அரசு விதிகளின் படி, அன்னிய நிறுவனங்கள், 30 சதவீதம் பொருட்களை உள்நாட்டு சிறு மற்றும் உற்பத்தியாளர்களிடம் வாங்க வேண்டும் என்று இருந்தாலும். இதிலும், வசதியுள்ள உள்நாட்டு நிறுவனங்கள் தான் பயன்பெறுவரே தவிர. உண்மையிலேயே சந்தைப்படுத்துதல் தேவைப்படும், சிறு, குறு உற்பத்தியாளர்கள் பயன் பெற மாட்டார்கள்.
வால்மார்டின் தோல்விகள்:

வால்மார்ட், பல நாடுகளில் செயல்படும், உலகிலேயே பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமாக இருந்தாலும், கால் பதித்த அனைத்து இடங்களிலும் வெற்றி பெறவில்லை. முக்கியமாக, ஜெர்மனி, தென் கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தோல்வியடைந்து உள்ளது. இந்தோனேசியாவில் இருந்து அரசியல் காரணங்களால் வெளியேறிய வால்மார்ட், ஜெர்மனி மற்றும் தென் கொரியாவில் தொழில் ரீதியாக தோல்வி அடைந்தது.

ஜெர்மனி:

1997ம் ஆண்டில் ஜெர்மனியில் நுழைந்த வால்மார்ட், 2006ம் ஆண்டு, சுமார் 95 கடைகளை மூடிவிட்டு கிளம்பிவிட்டது. இதில், அந்த நிறுவனத்திற்கு 6,900 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என, தொழில்நிபுணர்கள் கணக்கிட்டு உள்ளனர்.இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து, ஜெர்மனி நாட்டின், பிரெமன் பல்கலை, ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், வியூகத்தில் பிழை, நிர்வாக தடுமாற்றம், பலத்த போட்டி மற்றும் ஜெர்மானிய சட்டங்களை மதிக்காததால் ஏற்பட்ட கெட்ட பெயர் ஆகியவை, முக்கிய காரணங்களாக குறிப்பிடப் பட்டு உள்ளன.

வியூகத்தில் பிழை

ஜெர்மனியில் ஏற்கனவே இயங்கி வந்த இரண்டு சில்லரை வர்த்தக நிறுவனங்களை வாங்கித்தான் வால்மார்ட் நுழைந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் நிர்வாகங்களும், ஊழியர்களும் சரியாக ஒருங்கிணைக்கப் படவில்லை.நிர்வாக தடுமாற்றம்: முதலில், அமெரிக்க நிர்வாகிகளை வைத்தே வால்மார்ட் நடத்த விரும்பியது. இவர்களுக்கு ஜெர்மானிய கலாசாரம், மொழி ஆகியவற்றின் பரிச்சயம் இல்லாததால், ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினர். மேலும், இது, ஏற்கனவே இருந்த ஜெர்மானிய நிர்வாகிகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பலத்த போட்டி:

ஜெர்மனியில், வால்மார்ட் நுழைவுக்கு முன்பே, மெட்ரோ, ஆல்டி, லிடில், நார்மா, ரீவீ போன்ற பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கோலோச்சி வந்தனர்.வால்மார்ட் நிறுவனத்தின் வியூகம், "குறைந்த விலை, சிறந்த சேவை' என்ற அடிப்படையில் இருந்தது. ஆனால், ஜெர்மனியில், ஆல்டி போன்ற நிறுவனங்கள் குறைந்த விலை வியூகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததால், வால்மார்ட் அவர்களை வெல்ல முடியவில்லை.மேலும், சிறந்த சேவை என்ற பெயரில் வால்மார்ட் அமெரிக்க பாணியில், நுகர்வோர் வரவேற்பு போன்ற விஷயங்களை அமைத்தது. இது ஜெர்மானிய கலாசாரத்தில் பழக்கம் இல்லை என்பதால், சில நுகர்வோர், வரவேற்பாளர்கள் தங்களை தாக்க வந்ததாக கருதி 
போலீஸில் புகார் கொடுத்தனர்.

ஜெர்மானிய சட்டங்கள்:

மூன்று முக்கிய ஜெர்மானிய சட்டங்களை வால்மார்ட் மதிக்காததாகவும், அதனால், அதற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. அந்த சட்டங்கள்;
1. பெரிய நிறுவனங்கள் காரணம் காட்டாமல், எந்த பொருளையும் அதன் உற்பத்தி விலைக்கு கீழ் விற்க அனுமதி இல்லை.
2. அனைத்து "கார்பரேட்' நிறுவனங்களும் வரவு, செலவு கணக்குகளை காண்பிக்க வேண்டும்.
3. காலியான பிளாஸ்டிக் மற்றும் உலோக குளிர்பான குப்பிகளை, நுகர்வோர் கடைகளில் கொடுத்தால், அதற்கு அந்த கடை பணம் கொடுக்க வேண்டும்; அல்லது அந்த வகையான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

தென் கொரியா:

தென் கொரியாவில் 1997ல், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கப் பட்டது. வால்மார்ட் 1998ல் நுழைந்தது. ஆனால், எட்டு ஆண்டுகளுக்குள், 2006ம் ஆண்டு தோல்வி அடைந்து வெளியேறியது.இது குறித்து, தென் கொரியாவின், ஹான்யாங் பல்கலை ஒர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில், போட்டி, இட பற்றாக்குறை மற்றும் கொரியர்களின் நுகர்வு பழக்கங்கள், முக்கிய காரணங்களாக குறிப்பிடப் பட்டு உள்ளன.

போட்டி:

வால்மார்ட் நுழைவதற்கு முன்பே, கொரியாவில் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் நன்கு வளர்ந்து இருந்தன. அவற்றில், ஷின்செகே, லோட்டே, சாம்சங் மற்றும் எல்ஜி முன்னணி வகித்தன.தற்போது, ஷின்செகே நடத்தும் "இ-மார்ட்' தான் தென் கொரியாவில் முதன்மை சில்லரை வர்த்தக நிறுவனம்.உள்நாட்டு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நன்கு செயல்பட்டு வந்ததாலும், அவர்களின் நுகர்வோர் கலாசார புரிதலாலும், அவர்களை போல் குறைந்த விலையை வால்மார்ட் கொடுக்க முடியாததாலும், வால்மார்ட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.

இட பற்றாகுறை:

அனைத்து நகரங்களிலும் உள்நாட்டு வர்த்தகர்கள் முக்கிய இடங்களை கைப்பற்றி வைத்திருந்ததால், வால்மார்ட் நிறுவனத்திற்கு கடைகளை அமைக்க தகுந்த இடங்கள் கிடைக்கவில்லை.

நுகர்வு பழக்கங்கள்:

கொரிய நுகர்வோர், நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கடைகளையே விரும்புகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக, தேவைக்கு ஏற்ப மட்டுமே பொருட்களை வாங்குகின்றனர்.
கடைகளில், ஊழியர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். அனைத்து கடைகளிலும் சுவைத்து பார்ப்பதற்கும், பயன்படுத்தி பார்ப்பதற்கும், அழகான பெண்களை வைத்து இலவசங்கள் கொடுப்பது வழக்கம். கடைகளில், ஒரு கொண்டாட்டம் போன்ற சூழல் எப்போதும் நிலவ வேண்டும் என, எதிர்பார்ப்பர்.இதில், எதையுமே வால்மார்ட் நிறுவனத்தால் சரியாக செய்ய முடியவில்லை. வால்மார்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட கடைகளை, கிடங்குகள் போல் இருந்ததாக கருதினர். மேலும், வால்மார்ட், குறைந்த விலைகளை விளம்பரப்படுத்தியதை அவர்கள் விரும்பவில்லை. அதனால், வால்மார்ட் கடைகளுக்கு செல்வதை கவுரவ குறைச்சலாக அவர்கள் நினைத்தனர்.கொரிய நுகர்வோரை பொறுத்தவரை, இறைச்சி, மீன் போன்ற விஷயங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பே துண்டு போடப் பட வேண்டும். அது, நல்ல நிலையில் உள்ளதா என்பதை சோதித்து தான் வாங்குவர். இந்த வசதியை உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் "சூப்பர்மார்கெட்'டுகளுக்கு உள்ளளேயே உருவாக்கினர். வால்மார்ட் அதை செய்யவில்லை. அதே நேரத்தில் கொரியர்கள் மிகவும் விரும்பும் தங்கள் பாரம்பரிய உணவுகளையும் வால்மார்ட் போதிய அளவில் தரவில்லை.வால்மார்ட் கடைகளில், மளிகை பொருட்களோடு, மின் மற்றும் மின்னணு பொருட்கள், அறைகலன்கள் என, அனைத்து வகை பொருட்களும் ஒரே இடத்தில் விற்கப்பட்டன. இதையும் கொரியர்கள் விரும்பவில்லை. கொரியாவில் வெற்றிபெற்ற டெஸ்கோடெஸ்கோ, இங்கிலாந்தை சேர்ந்த, உலகில் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்களில் ஒன்று. டெஸ்கோ, தென் கொரியாவில் நுழைந்தவுடன், சாமர்த்தியமாக, சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுக் கொண்டது. கொரியாவில் "சாம்சங் டெஸ்கோ' என்ற பெயரில் கடைகளை நடத்தியது. ஸாம்சங் ஏற்கனவே சில்லரை வர்த்தகத்தில் செயல்பட்டு வந்ததால், கொரிய நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப, டெஸ்கோ கடைகளை அமைக்க முடிந்தது. இதனால், தென் கொரியாவில், டெஸ்கோ, நல்ல வெற்றி பெற்றது.

நன்றி : தினமலர் 

Tuesday, September 11, 2012

வீ.கே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி : நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர் இசக்கிக்கு பாராட்டு விழா கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை அருமை ஸ்மைலின் தலைமை வகித்தார். வீ.கே புதூர் பஞ்., துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் சங்கர், கணேசன், பாலசுப்பிரமணியன், சண்முகையா, ஜேசுதாசன், தங்கத்துரை, சிவராமன், சக்தி முருகன், திரவியம் உட்பட பலர் பாராட்டி பேசினர்.நல்லாசிரியர் இசக்கி ஏற்புரை வழங்கினார். பள்ளி ஆசிரியை மேரி ரோஸ்லெட் நன்றி கூறினார்.
நன்றி : தினமலர் 

Sunday, September 9, 2012

வீ.கே.புதூர் கோயில் கொடை விழா

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது.
வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த மாதம் 28ம் தேதி கால்நாட்டு விழாவுடன் துவங்கியது. அன்று இரவு 7.30 மணிக்கு கும்மிப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் மாலை 5 மணிக்கு வீ.கே.புதூர் திருவிளக்கு வழிபாட்டுக்குழு மற்றும் விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவில் கும்மிப்பாட்டு மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.

ஐந்தாம் நாள் விவேகானந்தர் இலக்கிய பேரவையின் சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. 6ம் நாள் நிகழ்ச்சியில் 2011-12ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ, மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு 10.30 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீபாராதனை நடந்தது.

ஏழாம் நாள் காலை 6 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒலிக்க, மேளதாள, நாதஸ்வர ஒலியுடன் வானத்தில் கருடன் வட்டமிட வருஷாபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தீர்த்தம் எடுத்து பவனி வரும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீபாராதனையும் நடந்தது.

எட்டாம் நாள் காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்திலிருந்து பால்குடம், கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால், தீர்த்த அபிஷேகங்களுடன் தீபாராதனையும், விசேஷ பூஜைகளும் நடந்தது. இரவு 9 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து அக்னிசட்டி ஏந்தி ஊர் பவனி வந்து காணிக்கை செலுத்தினர். இரவு 12 மணிக்கு உச்சிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கிடாய் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி கையில் ஏந்தி ஊர் பவனி வந்து அதனை ஆற்றில் கரைத்தனர்.

கொடை விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. விழா ஏற்பாடுகளை வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

நன்றி : தினமலர் 

Thursday, May 10, 2012

வீ.கே.புதூர் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்


வீரகேளம்புதூர் : வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கியது.

வீ.கே.புதூர் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களுக்கான 1421ம் பசலி ஆண்டு ஜமாபந்தி (வருவாய் குறை தீர்வாயம்) துவங்கியது. நிகழ்ச்சியை தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆர்டிஓ வின் நேர்முக உதவியாளர் பரமசிவன், தாசில்தார் சுமங்கலி, தென்காசி கோட்ட புள்ளியியல் அலுவலர் ஆலிசெய்யது சிராஸ்தீன் பாவா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குழந்தைசாமி, தலைமையிடத்து துணை தாசில்தார் செல்வநாயகம், வட்ட வழங்கல் அலுவலர் முத்துப்பாண்டி, மண்டல துணை தாசில்தார் லெவன்சியா சில்வேரா, சுரண்டை வருவாய் ஆய்வாளர் அரவிந்த் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமலர் 

Sunday, April 1, 2012

வீ.கே.புதூரில் அரசு கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்கள் ஆலோசனை கூட்டம்


வீரகேரளம்புதூர்:வீ.கே.புதூர் தாலுகா அரசு கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட அரசு கேபிள் டி.வி.தாசில்தார் சேதுராமலிங்கம் தலைமை வகித்தார். ஆப்ரேட்டர்கள் சார்பில் தெளிவான சிக்னல் கிடைத்து, பயனாளிகளுக்கு தெளிவான முறையில் நிகழ்ச்சிகளை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. வீ.கே.புதூர் தாலுகா அளவில் சுமார் 35 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் மொத்தத்தில் 3,500 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆப்ரேட்டர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி.தொழில்நுட்ப உதவியாளர்கள் பாலசுப்பிரமணியன், ஜேக்கப் மற்றும் கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தினமலர் 

Wednesday, March 28, 2012

மாவோயிஸ்ட் தாக்குதலில் ஊத்துமலை ராணுவீரர் பலி


வீரகேரளம்புதூர் :ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் பலியான ஊத்துமலை ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் ஊத்துமலையை சேர்ந்தவர் கொடிகாத்தகுமரன் (எ) குமரன் (27). தேசப்பற்று மிகுந்த இவரது தந்தை கருப்பையா தனது மகன் குமரனை கடந்த ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு அனுப்பினார். மாவேயிஸ்ட் தீவிரவாதிகள் நிறைந்த ஒடிசா மாநிலம் சுக்லா மாவட்டம் பீஜி பகுதியில் அவரது குழுவினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களது முகாமின் மீது கடந்த 26ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் குமரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவல் ஊத்துமலையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து உறவினர் மட்டுமின்றி கிராமமே கவலையில் ஆழ்ந்தது. இன்று (28ம் தேதி) காலை அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கார் மூலம் மாலை 3.30 மணிக்கு ஊத்துமலைக்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தென்காசி ஆர்.டி.ஓ.ராஜகிருபாகரன், வீ.கே.புதூர் தாலுகா மண்டல தாசில்தார் வெலன்சியா சில்வேரா, புளியங்குடி டி.எஸ்.பி.ஜமீம், ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர், சிஆர்பிஎப் கமாண்டர் பிஜி லாசர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து உடல் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு 24 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டர் பிஜிலாசர், டெபுடி கமாண்டர் நடராஜன், நெல்லை மாவட்ட ஆயுதப்படை எஸ்.ஐ.வேலாயுதம், வருவாய் ஆய்வாளர்கள் மாரியப்பன், சுப்பிரமணியன் உட்பட ஏராளமான அரசு உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக சோகத்தில் மூழ்கிய ஊத்துமலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கிராமம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் முருகையாபாண்டியன் தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. குமரனின் உடலை வேனில் இருந்து இறக்கிய போதும், ஊர்வலமாக எடுத்துச் சென்ற போதும் பொதுமக்கள் "பாரத் மாதாவுக்கு ஜே' என்ற கோஷம் எழுப்பியது ஒற்றுமை உணர்வை பிரதிபலித்தது.
நன்றி : தினமலர் 

Wednesday, March 21, 2012

அடிப்படை வசதிகள் இன்றி வீ.கே.புதூர் நூலகம்

வீரகேரளம்புதூர்:போதிய அடிப்படை வசதிகள் இல்லாத வீரகேரளம்புதூர் பொது நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றித்தர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தாலுகா தலைநகரமான வீரகேரளம்புதூரில் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரி, அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசினர் தொழிற்பயிற்சி மையம், யூனியன் துவக்கப்பள்ளி, ஆர்.சி.துவக்கப்பள்ளி, அண்ணா துவக்கப்பள்ளி உட்பட ஒன்பது கல்வி நிறுவனங்களும், தாலுகா அலுவலகம், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், தபால் அலுவலகம், சார்நிலை கருவூலம், கனரா வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
இங்கு பயிலும் மாணவ, மாணவிகளும், பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் பெரிதும் பயன்படுத்தும் பொது நூலகம் இங்கு உள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 12 புரவலர்கள், ஜெராக்ஸ் மெஷின், ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் இணையதள சேவை ஆகியன உள்ளன.ஆனால் இந்நூலகத்தில் மழை பெய்தால் நீர் கசிவும், மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் தரை தளம், பாதுகாப்பிற்கு தகவுகளில்லாத சிமென்ட் கிராதி ஜன்னல்கள், 500 சதுரஅடி அளவில் குட்டையான கட்டடம் என போதிய அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது.

வீரகேரளம்புதூர் மட்டுமின்றி அருகிலுள்ள தாயார்தோப்பு, ராஜபாண்டி, வெள்ளகால், இடையர்தவணை, செம்புலிப்பட்டணம், ராஜகோபாலப்பேரி, வீராணம், அதிசயபுரம், கலிங்கப்பட்டி, ராமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்நூல் நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக நூல் நிலையத்தை வேறு கட்டடத்திற்கு மாற்றித்தர வேண்டும். இதன் அருகிலேயே வேறு துறைகளுக்கு சொந்தமான பல கட்டடங்கள் கட்டியும் பலனில்லாமல் மூடிக்கிடக்கின்றன. அவற்றில் ஒன்றிலாவது மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
நன்றி : தினமலர் 

Thursday, March 15, 2012

வீ.கே.புதூரில் இருந்து நெல்லை மதுரைக்கு நேரடி பஸ்கள் இயக்க கோரிக்கை


வீரகேரளம்புதூர் :வீரகேரளம்புதூரிலிருந்து நெல்லை, மதுரை, சங்கரன்கோவிலுக்கு நேரடியாக பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாலுகா தலைநகரான வீரகேரளம்புதூருக்கு தாலுகா அலுவலகம், வங்கி சேவை, சார்நிலை கருவூலம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக தாலுகாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கல்வி கற்பதற்காகவும், கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்காகவும் இங்கிருந்து நெல்லைக்கும், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். ஏராளமான வியாபாரிகள் மதுரைக்கும் சென்று வருகின்றனர்.

ஆனால் இங்கிருந்து நெல்லை, சங்கரன்கோவில், மதுரைக்கு நேரடி பஸ் வசதி இல்லை. புளியங்குடியிலிருந்தோ, சுரண்டையிலிருந்தோ வருகின்ற பஸ்களில் தள்ளுமுள்ளு செய்து ஏறி நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையே உள்ளது. இதில் பெண்கள் மற்றும் பெரியோர்களின் பாடு பெரிதும் திண்டாட்டம்தான். சங்கரன்கோவில் செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் சுரண்டை சென்று அங்கிருந்து பின்னர் சங்கரன்கோவிலுக்கு பஸ் ஏற வேண்டும். இதனால் பொதுமக்களின் பணமும், நேரமும் வீணாகிறது. 30 கி.மீ. தூரத்திலுள்ள சங்கரன்கோவிலுக்கு சென்றுவர ஒருநாள் முழுவதும் வீணாகிறது.
எனவே வீரகேளம்புதூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வீரகேரளம்புதூரிலிருந்து நெல்லை, சங்கரன்கோவில், மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு நேரடி பஸ் சேவையை துவக்க வேண்டும். தாயார்தோப்பு, ராஜபாண்டி, வெள்ளகால் வழியாக தென்காசிக்கும் பஸ் வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தினமலர் 

Friday, January 6, 2012

வீ.கே.புதூரில் கடையடைப்பு


வீரகேரளம்புதூர் : கேரள அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து வீ.கே.புதூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

வீரகேரளம்புதூர் வியாபாரிகள் சங்கம், வட்டார ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கேரளாவில் முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினை அமல்படுத்தாமல் புதிய அணை கட்ட தீவிரம் காட்டும் கேரள அரசை கண்டித்தும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

நகரின் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் ரோடு முழுவதும் வெறிச்சோடி கிடந்தது. ஆட்டோக்கள், வேன்கள் ஓடவில்லை. வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், ஓட்டுநர்கள் கேரள அரசுக்கு எதிராகவும், தமிழர் நலனை காக்க வற்புறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
நன்றி : தினமலர் 

வீ.கே.புதூரில் குடிநீர் குழாயில் உடைப்பு


வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் மெயின்ரோட்டில் ஏற்படடுள்ள தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் வழியோர கிராமங்களுக்கான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் வீ.கே.புதூர் மெயின்ரோட்டின் வழியே செல்கிறது. இதில் வீ.கே.புதூர் வடக்கு பஸ்ஸ்டாப் அருகில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. வடிகால் வாரியத்தின் மூலம் பலமுறை அடைக்கப்பட்டும் மீண்டும், மீண்டும் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்போதும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி சாக்கடை நீருடன் கலக்கிறது. குடிநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அந்த இடம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. உடைப்பு ஏற்பட்ட தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து எட்டு நாட்களுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொஞ்சம் கசிவுதானே உள்ளது. அதிகம் உடைந்தால் உடனடியாக தோண்டி அடைத்து விடலாம் என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

எனவே உடைப்பு மேலும் அதிகமாகி புதிய ரோடு முழுவதும் சேதமாகும் முன் இதனை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி : தினமலர் 

சகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை.

சென்னை: பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் நோய் வந்தால் சேர்த்து வைத்த, சொத்து பத்தெல்லாம் பறந்து போய் விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அந்தளவிற்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பகல் கொள்ளையாக உள்ள நிலையில், தமிழகத்திலேயே முதன் முறையாக கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை பொதுமக்களுக்கு பத்து ரூபாயில் நோய்க்கு தீர்வு தருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில் கடந்த 2010ல் சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பியாரிலால் ஜெயினின் உதவியுடன் ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சகுந்தலா என்பவரின் பெயரில் தொடங்கப்பட்டது தான் சகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை. இம் மருத்துவமனை ரூ. மூன்று கோடி செலவில் பலரின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிப்பதில் பகுதி மக்களின் முதல் தேர்வாக இம்மருத்துவமனை உள்ளது.


இங்கு பிள்ளை பேறு பெறும் பெண்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளுடன், தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவும் மிக குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை அளிக்கின்றனர்.
இன்று தலைவலி மற்றும் காய்ச்சல் வந்தால் கூட, மருத்துவரை அணுகினால் குறைந்தபட்சம் மருத்துவருக்கு நூறு ரூபாய் அழ வேண்டியிருக்கும். ஆனால் இங்கு மருத்துவ பரிசோதனைக்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சுகப்பிரசவத்திற்கு ஆயிரம்ரூபாயாகவும், அறுவை சிகிச்சைக்கு ஆறாயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக பெறுகின்றனர். இந்த கட்டணங்கள் கூட, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினரின் சம்பளத் தேவைக்காக தான் வாங்கப்படுகிறது என மருத்துவமனை செயலரும், கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினருமான மாரிமுத்து கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எண்ணியே இம்மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து ஓன்றரை ஆண்டாகி விட்டது. இதுவரை 827 பெண்களுக்கு சுகப்பிரசவமாகவும் அறுவைசிகிச்சை மூலமாகவும் மகப்பேறு வைத்தியம் பார்த்திருக்கிறோம்.
தினமும் வருகிற புறநோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை எண்பதாயிரத்தை தாண்டி விட்டது. இங்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட மகப்பேறுக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்துள்ளோம். இம்மருத்துவமனைக்கு என்றுஇதுவரை விளம்பரம் கூட செய்தது கிடையாது. எல்லாம் மக்களின் பூரண நிம்மதியே எங்களுக்கு விளம்பரமாக அமைந்து வருகிறது. ஆந்திராவிலிருந்து கூட இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இயங்கும் இம்மருத்துமனையில் பெறப்படும் குறைந்த கட்டணங்கள் கூட மருத்துவர்களின் சம்பளத் தேவைக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. சிகிச்சையை பொறுத்தமட்டில் மக்களுக்கு இலவசம் என்றே சொல்லலாம். தமிழகத்திலேயே ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனை நடத்தப்படுவது இங்கு தான் உள்ளது என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

நன்றி : தினமலர்