Thursday, March 6, 2014

வீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும்

வீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்று ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோவில். குருவாயூர் திருக்கோவிலில் உள்ள மூலவரைப் போன்ற தோற்றத்துடன் இத்திருக்கோவிலின் மூலவரும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கோவிலின் மேற்கே சுரண்டை - திருநெல்வேலி சாலையோரம் அமைந்துள்ளது. மிகவும் அழகான இந்த தெப்பக்குளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் புதர் மண்டி உள்ளது. தெப்பக்குளத்தில் கல்சுவர் மற்றும் நீராழி மண்டபத்தில் மரங்கள் முளைத்து உள்ளது. தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்து போய் உள்ளதால் தெப்பக்குள நீர் பாசி படிந்து உள்ளது.
எனவே, இந்த தெப்பக்குளத்தை சீரமைக்க ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

Friday, July 5, 2013

வீரகேரளம்புதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூரில் தமிழ்நாடு வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக முதல்வரின் கவனத்திற்கு தங்கள் கோரிக்கைகளைக் கொண்டு செல்லும் விதமாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.ஏ.ஓ., சங்க தாலுகா தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். சங்கத்தலைவர் வேல்ச்சாமி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். வங்கிகள் மூலம் சம்பளம் வழங்கும் முறையால் காலதாமதம் ஏற்படுவதால் அம்முறையை ரத்துசெய்யவேண்டும். வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர்களுக்கு நியாயமான பணி உயர்வு வழங்கிட வேண்டும். அங்கீகாரம் பெற்ற சங்கங்களுக்கு கூட்டுக்கலந்தாய்வுக்கு நாள் ஒதுக்க வேண்டும். உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து அலுவலர்களும், உதவியாளர்களும் கலந்து கொண்டனர். கிராம உதவியாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
நன்றி : தினமலர் 

வீ.கே.புதூரில் கிளை நூலக புதிய கட்டடம் திறப்பு விழா

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் கிளை நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.

முழுநேர நூலகமான வீரகேரளம்புதூர் கிளை நூலகம் 600 சதுர அடி கொண்ட சிறிய கட்டடத்தில் இயங்கி வந்தது. வாசகர்கள் அமர்ந்து படிக்க இடம் இல்லாமல் நின்று கொண்டே படிக்க வேண்டிய ‹ழ்நிலை இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, இந்நூலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றும் பணி துவங்கி அதன் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு வீரகேரளம்புதூர் பஞ்., தலைவர் மருதப்பாண்டியன் (எ) பாபுராஜா தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, மாவட்ட காங்., செயலாளர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் வக்கீல் சுப்பையா வரவேற்றார். வீரகேரளம்புதூர் தாசில்தார் குருச்சந்திரன் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜாண், வியாபாரிகள் சங்க தலைவர் அருணாசலம் யோகீஸ்வரர், சேசுராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஏசுப்பாண்டி, ஆண்டபெருமாள், ஐயம்மாள், தொடக்க வேளாண்மை கடன் சங்கத் தலைவர் வேலுச்சாமிபாண்டியன், முத்துராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை நூலகர் வெற்றிவேலன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை கிளை நூலகர் திருமலை நம்பி தலைமையில் உதவியாளர்கள் கைலாசம், சங்கீதா செய்திருந்தனர்.

நன்றி : தினமலர் 

Sunday, June 2, 2013

வீரகேரளம்புதூரில் பைக் திருடிய2 பேர் கைது

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் பைக் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்தனர்.வீரகேரளம்புதூர் கோட்டை அண்ணா நகர் அருகில் சுரண்டை இன்ஸ்பெக்டர் ஜமால், எஸ்.ஐ., சுந்தர் மூர்த்தி, போலீசார் சசிகுமார் மற்றும் அந்தோணி பாஸ்கர் வாகன பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே நம்பர் பிளேட் இல்லாத வண்டியை ஓட்டிவந்த வடகரையைச் சேர்ந்த மனோகரன் (எ) முகம்மது ரியாஸ்தீன் (38), சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் வேலுச்சாமி (49) ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் ராஜபாண்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது எக்ஸெல் வண்டியைத் திருடி, நம்பர் பிளேட்டைக் கழட்டி ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஹோண்டா சைன் பைக்கும் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

நன்றி : தினமலர் 

வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.இப்பள்ளியில் 151 மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சீதாலெட்சுமி தமிழ் 97, ஆங்கிலம் - 84, கணிதம் - 100, அறிவியல் - 99, சமூக அறிவியல் - 98 மதிப்பெண்களுடன் மொத்தம் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி ஆபிதா தமிழ் 91, ஆங்கிலம் - 85, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 100 மொத்தம் 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்.மாணவி மணிமேகலை தமிழ் - 94, ஆங்கிலம் - 87, கணிதம் - 96, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 98 மொத்தம் 473 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். மாணவி ஆனந்தி கணிதம் அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் நூறு சதவிகித மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளை தாளாளர் மேரிடெய்சி ராஜம்மாள், தலைமை ஆசிரியை காளியம்மாள் மற்றம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

நன்றி : தினமலர்