திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரு கால்களும் ஊனமுற்ற
இளைஞர் தனது ஊனத்தை மறந்து, படிப்பறிவு இல்லாத கிராம மக்களுக்கு பல்வேறு
உதவிகளை செய்து வருகிறார்.
வீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட வீராணம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற
ஆசிரியர் பூலியப்பனின் மூன்றாவது மகன் இருதாலய மருத பாண்டியன்.
பிறவியிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர்.
ஆனால், உள்ளம் கடுகளவும் வாடாமல் தன்னம்பிக்கையை தனது உயிர் மூச்சாக கொண்டு,
பல்வேறு சமூக சேவைகள் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் இருதாலய மருத
பாண்டியன்.
பாண்டியனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பள்ளி இறுதி
வகுப்பு வரை படித்துள்ளார்.
தனது அபார திறமையாலும், சிறந்த பேச்சாற்றலாலும், மரியாதையான அணுகுமுறையாலும்,
படிக்காத பாமரர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்தும், சுகாதாரம், மருத்துவம்
மற்றும் சகல துறைகள் குறித்தும் எளிய முறையில் விளக்கி விழிப்புணர்வு
ஏற்படுத்தி, அரசு நலத் திட்ட உதவிகளை உரியவர்களுக்குப் பெற்றுத் தந்து
கொண்டிருக்கிறார்.
இதுவரை வீராணம் கிராமத்தில் 350 பேருக்கு குடும்ப அட்டைகளை பெற்று தந்துள்ளார்.
150 பேருக்கு இலவச வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் கட்ட வங்கிகள் மூலம் கடன்
உதவியும் பெற்று தந்துள்ளார்.
மேலும் 150 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 30 ஏழைப் பெண்களுக்கு திருமண
உதவித் தொகை, மேலும் 200 பேருக்கு வங்கி கடன் உதவி ஆகியவற்றையும் பெற்றுத்
தந்துள்ளாராம் பாண்டியன்.
தனது கிராம மக்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை
தேவைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அந்தப் பிரச்சனைகளையும்
தீர்த்து வருகிறார்.
வீராணம் அரசு உயர் நிலைப்பள்ளியிலும், ஆலங்குளம் ஊராட்சி ஓன்றிய
மேல்நிலைப்பள்ளியிலும் போலியோ விழிப்புணர்வு பேரணிகள், ஏழை எளிய குடும்பத்தில்
பிறக்கும் குழந்தைகள் கண்டிப்பாக பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பதை
வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சி
தலைவரால் பாராட்டு பத்திரம் பெற்றுள்ளார்.
மேலும் ரோட்டரி கிளப் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இவரை பாராட்டி
சான்றிதழ்கள் வழங்கியுள்ளன.
பாண்டியன் தற்போது பிராணிகள் நலவாரிய உறுப்பினராகவும், திருநெல்வேலி மற்றும்
கன்னியாகுமரி மாவட்ட பசுக்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளராகவும் இருந்து கோ
சாலை அமைத்தல், மண் புழு உரம் தயாரித்தல், இயற்கை விவசாயம் போன்ற பல்வேறு
கருத்துகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்படுத்தியும்
காட்டி வருகிறார்.
மேலும் 2002ம் ஆண்டு நெல்லை சமூக மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம்
கோவில்களில் தானமாக பெறப்பட்ட கால்நடைகளை சுமார் 300 ஏழை விவசாயிகளுக்கு
பிராணிகள் நல வாரிய விதிகளுக்கு உட்பட்ட ஓப்பந்தத்தின்படி தானமாக
வழங்கியுள்ளார்.
மேலும் தனது பகுதியில் முதியோர் இல்லம் அமைக்கவும், அனாதைக் குழந்தைகளுக்கான
காப்பகம் அமைத்தல், ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம் அமைக்கவும் தீவிர முயற்சி
செய்து வருகிறார்.
ஊனத்தை வென்று தான் சார்ந்த மக்களுக்கு உதவியாக இருந்து வரும் இருதாலயப்
பாண்டியன் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், அன்பையும் பெற்றுள்ளார்.
இருதாலயப் பாண்டியன் செய்த சாதனைகள் உண்மையிலேயே இமாலய சாதனைதான்