Wednesday, September 28, 2011

வீ.கே.புதூர் அருகே பெண்ணின் எலும்புக்கூடு

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் அருகில் மலைப்பகுதியில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வீ.கே.புதூர் - ஆலங்குளம் வழியில் உள்ள இடைச்சி மலையின் வடக்கு பகுதியில் முட்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் ஒரு எலும்புக்கூடு கிடப்பதை கண்ட வனக்காவலர் காசி கழுநீர்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வனிடம் தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வீ.கே.புதூர் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் தலைமையில் சென்று பார்த்தபோது சுமார் 45 வயது மதிக்கதக்க ஒரு பெண்ணின் எலும்புகூடு என தெரிய வந்தது.உடம்பு முழுவதும் மக்கிப் போன நிலையில் எலும்புக்கூடு மட்டும் கிடந்தது. கூட்டின் மேல் ஆரஞ்ச் கலர் சேலையும், சந்தன கலர் ஜாக்கெட்டும், பிரவுன் கலர் பாவாடையும் இருந்தன. கழுத்தில் தாயத்துடன் கூடிய கருப்பு கயிறும் மட்கிய நிலையில் கிடந்தது. கையில் அலுமினிய வளையல்கள் இருந்தன. இறந்து நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது.தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் வழக்குபதிவு செய்தார். எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டு பாளை., ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது கொலையா அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நன்றி: தினமலர் 

வீ.கே.புதூரில் விழிப்புணர்வு பேரணி

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. வீரகேரளம்புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரி சார்பில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை வீரகேரளம்புதூர் தாசில்தார் சுமங்கலி கொடியசைத்து துவங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏஞ்சல்ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் முன்னிலை வகித்தனர். பேரணி தாலுகா அலுவலகம் முன் துவங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. மூளையசதி நோய் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் நிறைந்த அட்டைகளை ஏந்தி வந்த மாணவியர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகித்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு முதல்வர் ஏஞ்சல்ராணி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அன்னலெட்சுமி வரவேற்றார். மூளையசதி நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மாணவிகளின் குறுநாடகம் மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் சமாதானப்பிரியா நன்றி கூறினார்.
நன்றி: தினமலர் 

Saturday, September 17, 2011

வீ.கே.புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் கொடை விழா

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சிமாகாளி அம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த 9ம் தேதி மாலை 6 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை நடந்தது. 12ம் தேதி மாலை 5 மணிக்கு குற்றால தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணிக்கு 2010-11ம் ஆண்டு 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வருஷாபிஷேகமும், உச்சிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும், சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்தில் இருந்து பால்குடம் மற்றும் கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வருதலும், பால்குடம் மற்றும் தீர்த்தங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பொங்கலிடுதலும், இரவு 9 மணிக்கு செண்டா மேளம் முழங்க தீச்சட்டி ஏந்தி வலம் வந்து பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர். இரவு 12 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நற்று காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி வந்து கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. வரும் 20ம் தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சமுதாய நாட்டாண்மை நயினார் தலைமையில் வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்தனர்.
நன்றி : தினமலர் 

Thursday, September 8, 2011

வீ.கே.புதூர் உச்சிமகாளி அம்மன் கோயிலில் 13ம் தேதி கொடை விழா

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. வீரகேரளம்புதூரில் உச்சிமாகாளி அம்மன் கோயில் ஆவணி கொடைவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நாளை (9ம் தேதி) மாலை 5 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை நடக்கிறது. 12ம் தேதி மாலை குற்றால தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீப ஆராதனையும் நடக்கிறது. அன்று இரவு 10மணிக்கு 2010-11ம் ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. 13ம் தேதி காலை 6.30 மணிக்கு வருஷாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன. காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்தில் இருந்து பால்குடம் மற்றும் கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர்பவனி வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால்குடம், தீர்த்தங்கள், அபிஷேகங்களும், அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு பொங்கலிம் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தீச்சட்டி எடுத்து ஊர்பவனி வருதலும், 12 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் வலம் வருதலும், கிடாய் வெட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 14ம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டும், முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை நாட்டாமை நயினார் தலைமையில் வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.
நன்றி : தினமலர்