Thursday, June 16, 2011

வீ.கே.புதூரில் ஜமாபந்தி நிறைவு


வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்றது.

வீ.கே.புதூர் வட்டாரத்திற்கான 1420ம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்வுகள் நான்கு நாட்கள் நடந்தன. குறுவட்ட வாரியாக கிராம கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்து வருவாய்த்துறை சம்பந்தமாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

முதல் நாளில் சுரண்டை குறுவட்டத்தில் அடங்கிய சிவகுருநாதபுரம், சுரண்டை பகுதி 1, 2, ஜமீன் சுரண்டை, ஆனைகுளம், குலையநேரி கிராமங்களின் கணக்குகளும், இரண்டாம் நாளில் வீ.கே.புதூர் குறுவட்டத்தில் அடங்கிய வீ.கே.புதூர் வெள்ளகால், ராஜகோபாலப்பேரி, அகரம், வீராணம் கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன.

மூன்றாம் நாளில் கருவந்தா குறுவட்டத்தில் அடங்கிய கருவந்தா, மேல மற்றும் கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணாபுரம், குறிச்சாம்பட்டி, வாடி, அச்சங்குட்டம் கிராமங்களுக்கும், நான்காம் நாளில் ஊத்துமலை குறுவட்டத்தில் அடங்கிய ஊத்துமலை, வடக்குகாவலாகுறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்காலன்குளம், முத்தம்மாள்புரம் கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன.

பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 1029 மனுக்கள் பெறப்பட்டன. முதியோர் உதவித் தொகை வேண்டி மட்டும் 713 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 3 பேருக்கு உடனடியாக முதியோர் உதவித் தொகை வழங்கவும், 37 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டது. ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம் வேண்டி பெறப்பட்ட 7 மனுக்களின் மீதும் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்ற மனுக்களின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தீர்வாய அலுவலர் செல்வராஜ் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் மணிபாபு, தலைமையிடத்து துணை தாசில்தார் சிவசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் சுதந்திரம், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பால்துரை, வட்ட வழங்கல் அலுவலர் சேதுராமலிங்கம், வருவாய் ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், மாரியப்பன், அகமது, சிவில் சப்ளை தனி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
 நன்றி : தினமலர் 

வீ.கே.புதூரில் அரசு மகளிர் விடுதி அமைக்க கோரிக்கை

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூரில் அரசினர் மகளிர் விடுதி அமைக்க ஜமாபந்தி நிகழ்ச்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வீ.கே.புதூர் பொதுமக்களின் சார்பில் பஞ்., துணைத் தலைவர் செந்தில்குமார் வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

வீ.கே.புதூர் தாலுகா தலைநகராகும். இங்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியன உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்கென அரசினர் பள்ளி மாணவர் விடுதியும், அரசினர் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு மகளிருக்காக உள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இங்குள்ள கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். நெல்லை பேட்டையை அடுத்து அருகில் எங்கும் மகளிர் விடுதிகள் இல்லை.

எனவே வீ.கே.புதூரில் அரசினர் மாணவியர் விடுதி அமைத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த அனைவருக்கும் பேருதவியாக இருக்கும். சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த மாணவிகளும் இங்கு தங்கியிருந்து கல்வி பயில வசதியாக இருக்கும்.

எனவே உடனடியாக மாணவியர் விடுதி அமைக்க வேண்டும் என மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் 

Monday, June 6, 2011

வீ.கே.புதூர் கல்லூரியில் இலவச சிகிச்சை மையம் திறப்பு

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்பதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 31ம் நாள் புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையில் 4,000 விதமான நச்சுப் பொருட்கள் உள்ளன. இதில் 56 வகைகள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. ஒரு சிகரெட் மனிதனின் வாழ்நாளில் 7 நிமிடத்தை குறைக்கிறது. இந்தியாவில் தினமும் 2,500 பேர் புகையிலை பயன்படுத்தியதால் இறக்கின்றனர். புகையிலை புகைப்பவர்களை மட்டுமன்றி சுவாசிக்கின்ற மற்றவர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புகையிலை ஒழிப்பு தினம் வீ.கே.புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரியில் கடைபிடிக்கப்பட்டது. புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மரியதங்கராஜ் மையத்தை திறந்து வைத்து புகையிலையினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசினார். தொடர்ந்து செவிலியர் கல்லூரி மற்றும் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தி, கோஷங்களை எழுப்பி ஊர்வலம் வந்தனர். புகையிலை பயன்படுத்துவோர் குறித்து சர்வே எடுக்கப்பட்டு விபரம் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வேலை நாட்களிலும் புகையிலையை பயன்படுத்துவோருக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும் என நர்சிங் பயிற்சிக் கல்லூரி முதல்வர் ஏஞ்சல்ராணி தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர் 

Thursday, June 2, 2011

வருவாய் தீர்வாய முகாம் வீ.கே.புதூரில் 8ல் துவக்கம்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய முகாம் 8ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. வீரகேரளம்புதூர் தாலுகாவில் குறுவட்ட அளவிலான 1420ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய முகாம் நடைபெறுகிறது. இதில் வருவாய்த்துறை தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். தினமும் காலை 9 மணிக்கு துவங்கும் இம்முகாமில் வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கலந்து கொள்கிறார். வரும் 8ம் தேதி சுரண்டை குறுவட்டத்தில் அடங்கிய சுரண்டை பகுதி1 மற்றும் 2, சிவகுருநாதபுரம், ஆனைகுளம், குலையநேரி, ஜமீன், சுரண்டை பகுதிகளுக்கும், 9ம் தேதி வீரகேரளம்புதூர் குறுவட்டத்தில் அடங்கிய வெள்ளகால், வீரகேரளம்புதூர், ராஜகோபாலப்பேரி, அகரம், வீராணம் பகுதிகளுக்கும் நடக்கிறது. 10ம் தேதி கருவந்தா குறுவட்டத்தில் அடங்கிய மேலக்கலங்கல், கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணாபுரம், குறிச்சாம்பட்டி, கருவந்தா, வாடி, அச்சங்குட்டம் பகுதிகளுக்கும், 14ம் தேதி ஊத்துமலை குறுவட்டத்தில் அடங்கிய வடக்கு காவலாகுறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்காலன்குளம், முத்தம்மாள்புரம் கிராமங்களுக்கும் நடக்கிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தாசில்தார் மணிபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி : தினமலர்