Thursday, December 16, 2010

வி.கே.புதூர் பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை

பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை செய்யக் காரணமாக இருந்த பஞ்சாயத்து தலைவரையும், ஊராட்சி உதவியாளரையும் கைது செய்யக் கோரி பொதுமக்கள் வி.கே.புதூர் தாலுகா அலுலகத்தை முற்றுகையிட்டனர்.
சுரண்டை அருகே உள்ள ராஜகோபாலபேரி ஊராட்சியில் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றியவர் அருமைராஜ். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மோசடி செய்ய இவரை பஞ்சாயத்து தலைவர் ஜான், ஊராட்சி உதவியாளர் நவநீதிகிருஷ்ணன் ஆகியோர் வற்புறுத்தினர். இதற்கு அருமைராஜ் மறுக்கவே அவர் தாக்கப்பட்டார்.
இதனால் அவமானம் அடைந்த அருமைராஜ், தனது சாவுக்கு பஞ்சாயத்து தலைவர் ஜான், ஊராட்சி உதவியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அருமைராஜ் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்க்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வி.கே.புதூர் தாலுகா அலுலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
*****************************************
தற்கொலை நடந்து தோராயமாக ஒரு மாதமாகியும், இதுதான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தொடர் போராட்டங்கள் நடத்தியும் இதுதான் நிலை என்றால் ஜனநாயகம், மக்களாட்சி என்பதன் பொருள் என்ன?

சமூகத்துக்கு உழைக்கு ஊனமுற்ற இளைஞர்

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரு கால்களும் ஊனமுற்ற
இளைஞர் தனது ஊனத்தை மறந்து, படிப்பறிவு இல்லாத கிராம மக்களுக்கு பல்வேறு
உதவிகளை செய்து வருகிறார். 
வீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட வீராணம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற
ஆசிரியர் பூலியப்பனின் மூன்றாவது மகன் இருதாலய மருத பாண்டியன். 
பிறவியிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர். 
ஆனால், உள்ளம் கடுகளவும் வாடாமல் தன்னம்பிக்கையை தனது உயிர் மூச்சாக கொண்டு,
பல்வேறு சமூக சேவைகள் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் இருதாலய மருத
பாண்டியன். 
பாண்டியனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பள்ளி இறுதி
வகுப்பு வரை படித்துள்ளார். 
தனது அபார திறமையாலும், சிறந்த பேச்சாற்றலாலும், மரியாதையான அணுகுமுறையாலும்,
படிக்காத பாமரர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்தும், சுகாதாரம், மருத்துவம்
மற்றும் சகல துறைகள் குறித்தும் எளிய முறையில் விளக்கி விழிப்புணர்வு
ஏற்படுத்தி, அரசு நலத் திட்ட உதவிகளை உரியவர்களுக்குப் பெற்றுத் தந்து
கொண்டிருக்கிறார். 
இதுவரை வீராணம் கிராமத்தில் 350 பேருக்கு குடும்ப அட்டைகளை பெற்று தந்துள்ளார்.
150 பேருக்கு இலவச வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் கட்ட வங்கிகள் மூலம் கடன்
உதவியும் பெற்று தந்துள்ளார். 
மேலும் 150 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 30 ஏழைப் பெண்களுக்கு திருமண
உதவித் தொகை, மேலும் 200 பேருக்கு வங்கி கடன் உதவி ஆகியவற்றையும் பெற்றுத்
தந்துள்ளாராம் பாண்டியன். 
தனது கிராம மக்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை
தேவைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அந்தப் பிரச்சனைகளையும்
தீர்த்து வருகிறார். 
வீராணம் அரசு உயர் நிலைப்பள்ளியிலும், ஆலங்குளம் ஊராட்சி ஓன்றிய
மேல்நிலைப்பள்ளியிலும் போலியோ விழிப்புணர்வு பேரணிகள், ஏழை எளிய குடும்பத்தில்
பிறக்கும் குழந்தைகள் கண்டிப்பாக பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பதை
வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சி
தலைவரால் பாராட்டு பத்திரம் பெற்றுள்ளார். 
மேலும் ரோட்டரி கிளப் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இவரை பாராட்டி
சான்றிதழ்கள் வழங்கியுள்ளன. 
பாண்டியன் தற்போது பிராணிகள் நலவாரிய உறுப்பினராகவும், திருநெல்வேலி மற்றும்
கன்னியாகுமரி மாவட்ட பசுக்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளராகவும் இருந்து கோ
சாலை அமைத்தல், மண் புழு உரம் தயாரித்தல், இயற்கை விவசாயம் போன்ற பல்வேறு
கருத்துகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்படுத்தியும்
காட்டி வருகிறார். 
மேலும் 2002ம் ஆண்டு நெல்லை சமூக மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம்
கோவில்களில் தானமாக பெறப்பட்ட கால்நடைகளை சுமார் 300 ஏழை விவசாயிகளுக்கு
பிராணிகள் நல வாரிய விதிகளுக்கு உட்பட்ட ஓப்பந்தத்தின்படி தானமாக
வழங்கியுள்ளார். 
மேலும் தனது பகுதியில் முதியோர் இல்லம் அமைக்கவும், அனாதைக் குழந்தைகளுக்கான
காப்பகம் அமைத்தல், ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம் அமைக்கவும் தீவிர முயற்சி
செய்து வருகிறார். 
ஊனத்தை வென்று தான் சார்ந்த மக்களுக்கு உதவியாக இருந்து வரும் இருதாலயப்
பாண்டியன் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், அன்பையும் பெற்றுள்ளார். 
இருதாலயப் பாண்டியன் செய்த சாதனைகள் உண்மையிலேயே இமாலய சாதனைதான்

வீ.கே.புதூர் வட்டத்தில் குளங்கள் நிரம்பாததால் நெல் சாகுபடி பாதிப்பு

வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள மானாவாரிக் குளங்கள் போதிய மழை இல்லாததால் நிரம்பவில்லை. இதனால் இந்தக் குளங்களை நம்பியுள்ள பாசனப் பகுதிகளில் நெல்சாகுபடி பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள பங்களாச்சுரண்டை, பரங்குன்றாபுரம், வாடியூர், குலையேனேரி, ஆனைகுளம், கரையாளனூர், குரிச்சான்பட்டி, கீழக்கலங்கல், கருவந்தா, அச்சங்குன்றம் ஆகிய மானாவாரிக் குளங்கள் போதிய மழை பெய்யாததால் தண்ணீரின்றி  காணப்படுகின்றன.
இதனால் இந்தக் குளங்களை நம்பியுள்ள பாசனப் பகுதிகளில், இதுவரை நெல் நடவுப்பணிகள் தொடங்கவில்லை.
மேலும் மழை பெய்யாத காரணத்தால், இந்தப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் வீரகேரளம்புதூர் வட்டத்தில் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன

வீ.கே.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்

வீரகேரளம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
​ ​ ​ வட்ட தலைநகரான வீரகேரளம்புதூரில் 40 ஆண்டுகளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.​ சங்கரன்கோவில் துணை சுகாதார மாவட்டத்தின்கீழ் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையம்,​​ தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
​​ ​ ஆண்டுதோறும் இங்கு பிரசவம் அதிக அளவில் நடைபெறுகிறது.​ ஆனால் ஒரே நேரத்தில் 2-க்கும் கூடுதலாக பிரசவம் நடைபெற்றால் தாய்-சேயைத் தங்க வைப்பதற்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லை.
​ ​ ​ எனவே,​​ வீரகேரளம்புதூர் அரசு ஆரம்ப சுதாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வீரகேரளம்புதூர் ஊராட்சித் தலைவர் எஸ்.எம்.​ மருதப்பபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வீ.கே.புதூர் வட்டத்தில் ஜமாபந்தி இன்று தொடக்கம்

வீரகேரளம்புதூர் வட்டத்தில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கி ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
​ ​ ​ இதுகுறித்து வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் மணிபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
​ ​ ​ திருநெல்வேலி மாவட்ட வழங்கல் அலுவலர் வீரமணி தலைமையில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில்,​​ ஜூன் 9-ம் தேதி ​(புதன்கிழமை)​ சுரண்டை குறு வட்டத்திற்கு உள்பட்ட சுரண்டை,​​ சிவகுருநாதபுரம்,​​ ஜமீன் சுரண்டை,​​ அயன் சுரண்டை,​​ ஆனைகுளம் ஆகிய வருவாய் கிராமங்களின் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.
​ ​ ​ தொடர்ந்து ஜமாபந்தி நடைபெறும் தேதிகளும், இடங்களும்
ஜூன் 10-வீரகேரளம்புதூர் குறு வட்டத்திற்கு உள்பட்ட வீரகேரளம்புதூர்,​​ வெள்ளகால்,​​ ராஜகோபாலப்பேரி,​​ வீராணம்.
​ ​ ​ ஜூன் 11-கருவந்தா குறு வட்டத்திற்கு உள்பட்ட அச்சங்குன்றம்,​​ வாடியூர்,​​ குறிச்சான்பட்டி,​​ நவநீதகிருஷ்ணாபுரம்,​​ மேலக்கலங்கல்,​​ கீழக்கலங்கல்,​​ கருவந்தா.
​ ​ ​ ஜூன் 15} ஊத்துமலை குறுவட்டத்திற்கு உள்பட்ட வடக்கு காவலாகுறிச்சி,​​ மருதப்பபுரம்,​​ மருக்கலாங்குளம்,​​ ஊத்துமலை.

வளர்ச்சி திட்டப் பணிகளை சேர்மன் ஆய்வு

வீரகேரளம்புதூர் : கீழப்பாவூர் பஞ்., யூனியனுக்கு உட்பட்ட வீரகேரளம்புதூர் பகுதியில் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகளை யூனியன் சேர்மன் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கீழப்பாவூர் பஞ்.,யூனியனுக்கு உட்பட்ட வீரகேரளம்புதூர், ராஜகோபாலப்பேரி, துத்திகுளம், இடையர்தவணை ஆகிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வீரகேரளம்புதூர் பஞ்., அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் புதிய ஊரணி அமைத்தல், அனைத்து சமுதாய மக்களுக்கான பொது மயானத்தில் எரியூட்டும் பிறை, ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நன்மைக்கூடம், ஒன்றிய பொது நிதியிலிருந்து இஸ்லாம் சமுதாய மயானத்திற்கு ரூ.2.50 லட்சம் செலவில் பாதை அமைத்தல்.

வீரகேரளம்புதூர் - ராஜகோபாலப்பேரி சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றுவதற்காக ரூ.3.60 லட்சம் செலவில் வாறுகால் அமைத்தல், கலிங்கப்பட்டியில் ரூ.4 லட்சத்தில் புதிய நூலக கட்டடம் கட்டுதல், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ரூ.1.30 லட்சசத்தில் சமையலறை கட்டடம் மற்றும் பள்ளி சீரமைப்பு பணிகள், ரூ.3.50 லட்சத்தில் நன்மைக்கூடம், ரூ.2 லட்சத்தில் எரியூட்டும் பிறை மற்றும் சிமென்ட் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.ராஜகோபாலப்பேரி பஞ்., அதிசயபுரத்தில் ரூ.3.50 லட்சத்தில் தார்சாலை அமைத்தல், நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் தாயார்தோப்பு - கீழச்சுரண்டை இடையே 50 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் தார்சாலை அமைத்தல் மற்றும் ராஜபாண்டி பஞ்.,சில் உள்ள செம்புலிப்பட்டணம் - கீழமேடு இடையே 34 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நடந்ததுள்ளன.ஒன்றிய பொது நிதியின் கீழ் இடையர்தவணை பஞ்., பள்ளிக்கூட தெருவில் ரூ.5 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைத்தல், ஒன்றிய உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ஒரு லட்ச ரூபாயில் சிமென்ட் தளம் அமைத்தல் ஆகிய பணிகளும், துத்திகுளம் பஞ்.,சில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய திட்டத்தின் கீழ் ரூ.6.90 லட்சத்தில் புதிய பஞ்., அலுவலகமும், ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணியும் நடந்து முடிந்துள்ளன.சுமார் ஒரு கோடியே 27 லட்ச ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை யூனியன் சேர்மன் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன் ரூ.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ஆய்வின் போது யூனியன் என்ஜினியர் பூச்செண்டு, பஞ்., தலைவர்கள் முருகையா பாண்டியன், ராமசாமி, யூனியன் கவுன்சிலர்கள் பொன்மோகன்ராஜ், மாரியம்மாள், உதயகுமார், குத்தாலிங்கம் மற்றும் மரியலூயிஸ், சாலை ஆய்வாளர்கள் ஜெயராஜ், குருசாமி உடனிருந்தனர்.

வீரகேரளம்புதூர் மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு

வீரகேரளம்புதூர் வட்டத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பொதுமக்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ம் தேதி தொடங்கியது. இப் பணி குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை நிவர்த்தி செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பொதுமக்கள் நேரிலோ அல்லது கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04633 - 277140, 94450-00677 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களின் அனைத்து கேள்வி களுக்கும் சரியான தகவலை தந்து ஒத்துழைக்குமாறு பொதுமக்களை வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் மணிபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

Wednesday, October 6, 2010

வீரகேரளம்புதூர்


திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலுக்கு அருகில் உள்ளது
ஊற்றுமலை. வீரகேரளன்புதூர் என்னும் ஊர்தான் அந்த ஜமீனின் தலைநகர்.
வீரை என்றும் அதனைச்சொல்வர்.
அங்கு நவநீதகிருஷ்ணன் கோயில் ஒன்றுஉண்டு. அதுதான்
ஊற்றுமலை ஜமீன்தார்களுக்கு குலதெய்வம்.அன்றாடப்பூசைகளும் விழாக்களும்
விமரிசையாக நடக்கும் கோயில் அது