Thursday, January 24, 2013

வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தின் சார்பில் வாக்காளர் தின விழா

வீரகேரம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தின் சார்பில் வாக்காளர் தின விழா, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் துவக்கப்பட்ட ஜனவரி 25, 1950ஐ நினைவு கூறும் விதமாக தேசிய வாக்காளர் தினம் கடந்த 2011ம் ஆண்டு முதல் ஜனவரி 25ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்காளரின் கடமையையும், உரிமையையும் குறித்த விழிப்புணர்ச்சியை பள்ளி, மாணவ, மாணவிகள் முதல் ஏற்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.

வீரகேரளம்புதூர் தாலுகா சார்பில் வாக்காளர் தினவிழா, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு தாசில்தார் குருச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் குமார்பாண்டியன், சிறப்பு திட்ட அமலாக்க துணைத் தாசில்தார் ராஜூ முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜான் வரவேற்றார். வாக்காளரின் உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேச்சுபுபோட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாசில்தார் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்கள் பங்கு கொண்ட வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் அடங்கிய பேனர்களையும், அட்டைகளையும் ஏந்தி, விழிப்புணர்வுக் கோஷங்கள் இட்ட வண்ணம் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து தாலுகா அலுவலகத்தை அடைந்தது. தாசில்தார், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment