Monday, March 28, 2011

வீ.கே.புதூர் மக்கள் ஓட்டு யாருக்கு?

வீரகேரளம்புதூர் : தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகள் பன்னிரண்டை கடந்த நிலையிலும் அடிப்படைத் தரம் உயராத வீரகேரளம்புதூரின் தலையெழுத்தை மாற்ற உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை தர இத்தாலுகா பொதுமக்கள் தயாராக உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் கூடுதல் தாலுகாவாக இயங்கி வந்த வீரகேரளம்புதூர் 1-9-1998ல் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தனி தாலுகாவுக்கான அடிப்படை வசதிகளில் தரம் உயர்ந்துள்ளதா என கேட்டால் இல்லை என்றுதான் பதிலாக கிடைக்கும். ஜமீன் காலந்தொட்டு போலீஸ் ஸ்டேஷனும், பிரேத பரிசோதனை கூடத்துடன் அரசு ஆஸ்பத்திரியும் இங்கு இயங்கி வந்தது. பின்னர் இது மருந்து கூடமாக மாற்றப்பட்டு தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது. தினமும் சுமார் 300க்கும் கூடுதலான நோயாளிகள் வந்து செல்கின்றனர். "24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும்' என்ற அறிவிப்பு உள்ளதே தவிர பெண் டாக்டர் இல்லை. மருத்துவ அலுவலரின் சொந்த முயற்சியால் மட்டுமே 4 படுக்கைகள் உள்ளன. எக்ஸ்ரே இல்லை. சித்த மருந்துகள் இல்லை. எனவே வீரகேரளம்புதூரை சேர்ந்தவர்கள் அல்லாது இதில் அடங்கிய பிற 25 கிராம மக்களும் மருத்துவ வசதிக்காக சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிகளை நாடி செல்லும் நிலையே உள்ளது. எனவே இது 30 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். பெண் டாக்டர்களும் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும். இத்தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய நிலம் சம்பந்தமான வழக்குகளுக்காக தென்காசி தாலுகா தலைநகருக்கும், குற்ற செயல்கள் சம்பந்தமான வழக்குகளுக்காக செங்கோட்டை தாலுகா தலைநகரிலுள்ள கோர்ட்டுக்கும் செல்ல வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக வீ.கே.புதூர் தாலுகாவிலேயே கோர்ட் அமைக்க வேண்டும். வீ.கே.புதூர் தாலுகாவில் 26 கிராமங்கள் உள்ளன. வீ.கே.புதூரிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியிலுள்ள அதிசயபுரம், வீராணம், சோலைசேரி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், சண்முகாபுரம், அமுதாபுரம், மருக்காலன்குளம் மற்றும் மேலக்கலங்கல், கீழக்கலங்கல், குறிச்சான்பட்டி, வாடியூர், கரையாளனூர், மரியதாய்புரம், கருவந்தா ஆகிய கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. மருக்காலன்குளத்திலிருந்து தாலுகா அலுவலகத்திற்கு ஒருவர் வர வேண்டுமானால் சங்கரன்கோவில் சென்று அங்கிருந்து சுரண்டை வந்து பின் வீ.கே.புதூர் வரவேண்டும். இதற்கு மூன்று மணி நேரமாகும். தேடிவந்த தாலுகா அலுவலக அலுவலர் அன்று விடுமுறை என்றால் ஒருநாள் முழுவதும் வீணாகிவிடும் நிலையே உள்ளது. எனவே இக்கிராமங்களுக்கு கூடுதல் அரசு பஸ் வசதி செய்து தரவேண்டும். 26 கிராம மக்களும் தேடி வரும் தாலுகா தலைநகரத்தில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு நிழற் குடையோ, பெண்கள் கூட ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதியோ, பஸ் நின்று செல்வதற்கு பஸ் ஸ்டாண்டோ இல்லை. இக்குறைகளை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்து தரவேண்டும். இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயிகளே உள்ளனர். இவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு பிற இடங்களில் அமைந்துள்ள சந்தைகளுக்கே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பணமும், நேரமும் விரயமாகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு வீ.கே.புதூரில் உழவர் சந்தை அமைத்து தர வேண்டும். வீ.கே.புதூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை கூடுதலாக ஒரு தேசிய மயமாக்கப்பட்ட பாங்க் கிளை வேண்டும் என்பதே. இங்கு கனரா பாங்க் கிளை உள்ளது. இங்கு 26 ஆயிரத்திற்கும் கூடுதலாக வங்கி கணக்குகள் உள்ளதாலும், அரசு அலுவலகங்கள் சம்பந்தமான வகைகளுக்கும், ஓய்வூதியர்களுக்கும் இக்கிளை மூலமாகவோ பணப்பரிமாற்றம் நடப்பதாலும், சாதாரண சேவைகளுக்காக பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நேர விரயத்தை கருத்தில் கொண்டு வேறு ஒரு தேசியமயமாக்கப்பட்ட பாங்க் கிளையை வீ.கே.புதூரில் துவக்க வேண்டும். வீரகேரளம்புதூர் தாலுகாவில் அடங்கிய வீ.கே.புதூர் பிர்க்கா பகுதிகளான ராஜபாண்டி, ராஜகோபாலப்பேரி, வெள்ளகால் போன்ற பகுதிகள் கீழப்பாவூர் யூனியனிலும், ஊத்துமலை, கருவந்தா பிர்க்கா பகுதிகள் ஆலங்குளம் யூனியனிலும் உள்ளன. தொகுதி மறுசீரமைப்பின்படி வீ.கே.புதூர் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகள் அனைத்தையும் தென்காசி தொகுதியில் இணைத்தது போலவே இவற்றையும் அருகிலுள்ள கழுநீர்குளம், முத்துகிருஷ்ணபேரி பகுதிகளையும் ஒன்றாக இணைத்து வீரகேரளம்புதூர் யூனியனை புதிதாக ஏற்படுத்த வேண்டும். வீரகேரளம்புதூரில் சார்நிலை கருவூலம் அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்த ஒவ்வொரு ஆட்சிலும் இது நடக்கும், நடக்கும்...என்றார்கள். ஆனால் காலமும், காட்சியும் தான் கடந்ததே ஒழிய காரியம் எதுவும் நடக்கவில்லை. எனவே இம்முறை மாற்றத்தை தர உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கு மட்டுமே தங்களது ஓட்டுகளை தர வீரகேரளம்புதூர் தாலுகா பொதுமக்கள் தயாராக உள்ளனர்.

1 comment: