Friday, January 14, 2011

பஞ். ஊழியர் தற்கொலை- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

சுரண்டை: சுரண்டை அருகே பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். 

நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள ராஜகோபாலபேரி சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ரத்னசாமி மகன் அருமைராஜ். அங்குள்ள பஞ்சாயத்தில் மக்கள் நல பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 5 தினங்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அருமைராஜ் வீட்டிலிருந்து நெல்லை கலெக்டருக்கு அவர் அனுப்பிய கடிதத்தின் நகல் கைப்பற்றப்பட்டது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது,

நான் ராஜகோபாலபேரியில் மக்கள் நல பணியாளராக சேர்ந்து ஒரு வருடமாகிறது. தற்போது வீராணம் கால்வாயில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இங்கு தினமும் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பல முறைகேடு நடந்து வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர் ஜான் மற்றும் உதவியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு இதில் சம்பந்தம் உண்டு. இந்த முறைகேடுகளுக்கு நான் தான் காரணம் என என்னை மிரட்டி கடிதம் எழுதி வாங்கி வைத்துள்ளனர். 

இவர்களுடன் சேர்ந்து மோசடி புகாரில் சிக்குவதை விட நானே எனக்கு தண்டனை கொடுக்கும் விதமாக தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜான் மற்றும் உதவியாளர் நவநீதிகிருஷ்ணன் ஆதியோர் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து அருமைராஜை தற்கொலைக்கு தூண்டியதாக பஞ்சாயத்து தலைவர் ஜான், உதவியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மீது சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று காலை மாவட்ட காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் முத்தையா, பிரதிநிதி சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் பொன்மோகன்ராஜ் உள்பட 1000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு கருப்பு பேட்ஜ் அணிந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். 

முன்னதாக ராஜகோபாலபேரியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்குள்ள நடுநிலைப்பள்ளிக்கு நேற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது

No comments:

Post a Comment