Monday, June 6, 2011

வீ.கே.புதூர் கல்லூரியில் இலவச சிகிச்சை மையம் திறப்பு

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்பதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 31ம் நாள் புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையில் 4,000 விதமான நச்சுப் பொருட்கள் உள்ளன. இதில் 56 வகைகள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. ஒரு சிகரெட் மனிதனின் வாழ்நாளில் 7 நிமிடத்தை குறைக்கிறது. இந்தியாவில் தினமும் 2,500 பேர் புகையிலை பயன்படுத்தியதால் இறக்கின்றனர். புகையிலை புகைப்பவர்களை மட்டுமன்றி சுவாசிக்கின்ற மற்றவர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புகையிலை ஒழிப்பு தினம் வீ.கே.புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரியில் கடைபிடிக்கப்பட்டது. புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மரியதங்கராஜ் மையத்தை திறந்து வைத்து புகையிலையினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசினார். தொடர்ந்து செவிலியர் கல்லூரி மற்றும் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தி, கோஷங்களை எழுப்பி ஊர்வலம் வந்தனர். புகையிலை பயன்படுத்துவோர் குறித்து சர்வே எடுக்கப்பட்டு விபரம் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வேலை நாட்களிலும் புகையிலையை பயன்படுத்துவோருக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும் என நர்சிங் பயிற்சிக் கல்லூரி முதல்வர் ஏஞ்சல்ராணி தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர் 

1 comment:

  1. நண்பா! நான் சோலைசேரி கிராமத்தை சேர்ந்தவன். தொடரட்டும் உங்கள் சேவை!

    ReplyDelete