Thursday, June 16, 2011

வீ.கே.புதூரில் ஜமாபந்தி நிறைவு


வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்றது.

வீ.கே.புதூர் வட்டாரத்திற்கான 1420ம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்வுகள் நான்கு நாட்கள் நடந்தன. குறுவட்ட வாரியாக கிராம கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்து வருவாய்த்துறை சம்பந்தமாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

முதல் நாளில் சுரண்டை குறுவட்டத்தில் அடங்கிய சிவகுருநாதபுரம், சுரண்டை பகுதி 1, 2, ஜமீன் சுரண்டை, ஆனைகுளம், குலையநேரி கிராமங்களின் கணக்குகளும், இரண்டாம் நாளில் வீ.கே.புதூர் குறுவட்டத்தில் அடங்கிய வீ.கே.புதூர் வெள்ளகால், ராஜகோபாலப்பேரி, அகரம், வீராணம் கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன.

மூன்றாம் நாளில் கருவந்தா குறுவட்டத்தில் அடங்கிய கருவந்தா, மேல மற்றும் கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணாபுரம், குறிச்சாம்பட்டி, வாடி, அச்சங்குட்டம் கிராமங்களுக்கும், நான்காம் நாளில் ஊத்துமலை குறுவட்டத்தில் அடங்கிய ஊத்துமலை, வடக்குகாவலாகுறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்காலன்குளம், முத்தம்மாள்புரம் கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன.

பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 1029 மனுக்கள் பெறப்பட்டன. முதியோர் உதவித் தொகை வேண்டி மட்டும் 713 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 3 பேருக்கு உடனடியாக முதியோர் உதவித் தொகை வழங்கவும், 37 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டது. ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம் வேண்டி பெறப்பட்ட 7 மனுக்களின் மீதும் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்ற மனுக்களின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தீர்வாய அலுவலர் செல்வராஜ் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் மணிபாபு, தலைமையிடத்து துணை தாசில்தார் சிவசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் சுதந்திரம், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பால்துரை, வட்ட வழங்கல் அலுவலர் சேதுராமலிங்கம், வருவாய் ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், மாரியப்பன், அகமது, சிவில் சப்ளை தனி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
 நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment