Thursday, June 16, 2011

வீ.கே.புதூரில் அரசு மகளிர் விடுதி அமைக்க கோரிக்கை

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூரில் அரசினர் மகளிர் விடுதி அமைக்க ஜமாபந்தி நிகழ்ச்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வீ.கே.புதூர் பொதுமக்களின் சார்பில் பஞ்., துணைத் தலைவர் செந்தில்குமார் வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

வீ.கே.புதூர் தாலுகா தலைநகராகும். இங்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியன உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்கென அரசினர் பள்ளி மாணவர் விடுதியும், அரசினர் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு மகளிருக்காக உள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இங்குள்ள கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். நெல்லை பேட்டையை அடுத்து அருகில் எங்கும் மகளிர் விடுதிகள் இல்லை.

எனவே வீ.கே.புதூரில் அரசினர் மாணவியர் விடுதி அமைத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த அனைவருக்கும் பேருதவியாக இருக்கும். சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த மாணவிகளும் இங்கு தங்கியிருந்து கல்வி பயில வசதியாக இருக்கும்.

எனவே உடனடியாக மாணவியர் விடுதி அமைக்க வேண்டும் என மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment