வீரகேரளம்புதூர் : கற்கள் சரிந்து சேதமாகிக் கிடக்கும் வீராணம் பெரியகுளக்கரையை உடனடியாக செப்பனிட விவசாயிகள் சார்பில் ராஜகோபாலப்பேரி, வீராணம் பஞ்., தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வீராணம், அதிசயபுரம், ராஜகோபாலப்பேரி, நெட்டூர், நாச்சியார்புரம், அகரம், காவலாக்குறிச்சி, கடங்கனேரி கிராம பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும், நீராதாரமாகவும் விளங்குவது வீராணம் பெரியகுளம். ராஜகோபாலப்பேரியில் துவங்கி அதிசயபுரம், வீராணம் வரையிலும் சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள நீண்டு, விரிந்த இக்குளத்தின் கரை நெடுகிலும் 7 மடைகள் உள்ளன. இவற்றின் மூலமும், இங்கிருந்து உபரிநீர் சென்று நிறையும் கிடாரக்குளம், காசிக்கு வாய்த்தான்குளம், நானூற்று வென்றான் குளம் ஆகிய குளங்களின் மூலமும் சுமார் 2,500 ஏக்கர் பரப்பிலுள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் தற்போது 10 அடி உயரத்திற்கு 104 மில்லியன் கனஅடி நீர் நிறைந்து குட்டி கடல்போல் காட்சி அளிக்கும் இக்குளத்தின் கரை பல இடங்களில் மண் அரிப்பு ஏற்படாமலிருக்க அடுக்கி வைத்த சதுரக்கற்கள் சரிந்து, மண் கரைந்து, சேதமடைந்து, பலமிழந்து காணப்படுகிறது. இவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ., பி.ஜி.ராஜேந்திரன் வீராணத்தில் நடந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் மேடையிலேயே நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜிடம் கோரிக்கை வைத்தார். அவரும் விரைவாக செய்து தருவதாக உறுதியளித்தார். தற்போது பெய்த தொடர் மழையால் இக்குளம் முக்கால் மடங்குக்கு மேல் நிறைந்துவிட்டது. மேலும் இரண்டடி தண்ணீர் தேக்கினால் கரை மேலும் பலமிழக்கும் அபாயமும், ராஜகோபாலப்பேரி கிராமத்திற்குள் நீர்புகும் நிலையும் உள்ளது. எனவே இக்குளக்கரையை உடனடியாக சீர்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வீராணம் பஞ்., தலைவர் பொன்னுத்துரைபாண்டியன், ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜான் ஆகியோர் அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர். தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமாரிடமும் இருவரும் மனுக்களை அளித்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பொற்செழியன் கூறும்போது:- ""வீராணம் கால்வாய், நெட்டூர் கால்வாய் மற்றும் குளங்களை சீரமைத்து புனரமைப்பதற்காக நபார்டு வங்கியிலிருந்து உதவிபெற 3.20 கோடி ரூபாய்க்கு கருத்துரு தயாரித்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி கிடைத்ததும் வரும் மார்ச் மாதத்திற்குள் இப்பணி மேற்கொள்ளப்பட்டு குளங்கள் சீரமைக்கப்படும்'' என்றார்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment