Monday, December 10, 2012

வீ.கே.புதூர் தாலுகாவில் நிறுத்தப்பட்ட பஸ்கள் உடனடி இயக்க வலியுறுத்தல்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரிலிருந்து கழுநீர்குளம் வழியாக இயக்கப்பட்ட அனைத்து பஸ்களையும் மீண்டும் இயக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துமலையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்படலாம் எனக்கருதி, வீரகேரளம்புதூரிலிருந்து கழுநீர்குளம் வழியாக ஆலங்குளம், நெல்லைக்குச் செல்லும் அனைத்து பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் அன்றாட அலுவல்களுக்கு சிரமமில்லாமல் பஸ் பயணத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி கழுநீர்குளம் அருகே அரசு பஸ்மீது கல்வீசி கண்ணாடி சேதமடைந்ததாக, ஓட்டுனர் வீரகேரளம்புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து, கல் வீசியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பஸ் போக்குவரத்து இல்லாததால், வீராணம், வீகேபுதூர், ராமனூர், கலிங்கப்பட்டி, தாயார் தோப்பு, ராஜபாண்டி, கழுநீர்குளம், முத்துக்கிருஷ்ணபேரி, அத்தியூத்து, கல்லூத்து, துத்திகுளம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் வரை அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வீ.கே.புதூரில் உள்ள அரசு ஐடிஐ, மற்றும் பள்ளிகளுக்கு வெளியூர்களிலிருந்து வரும் மாணவ, மாணவியர் பெரும்பாலும் நடந்தே வருகின்றனர். ஆட்டோக்களில் வருவதற்கு ஆலங்குளத்திலிருந்து வீகேபுதூர் வரையிலான பத்து கிமீ தூரத்திற்கு அதிகமான கட்டணம் வசூலிக்கின்றனர். கூடுதல் கேட்கப்படுகின்ற தொகையைத் தரமுடியாமல் பொதுமக்கள் ஆட்டோக்களிடம் தகராறு செய்கின்ற சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, பொதுமக்களின் நலன் கருதியும் மாணவர்களின் கஷ்டங்களை போக்கவும், நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களையும் உடனடியாக இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment