Monday, April 18, 2011

விவசாயம் செழிக்க விரைவான நடவடிக்கை : நம்மாழ்வார்.


"கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி' என்று போற்றப்படும் விவசாயிகள் நலன் பெறவும், விவசாயம் செழித்திடவும், அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

வேளாண்மைக்கு அடிப்படையானது விளைநிலம். வேளாண்மைக்குரிய நிலங்களை வேளாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற பிற பயன்பாடுகளுக்கு, விளை நிலத்தை எடுப்பதை, முதலில் தடை செய்ய வேண்டும்.கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில், 100 நாள் வேலையை எப்போது செய்ய வேண்டும் என்பதை, கிராம சபைகள் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான், வேளாண்மை தொழிலை கிராம மக்கள் தடையில்லாமல் செய்ய முடியும்.தமிழகத்துக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் நதிநீர்ப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைக்காக, அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு பார்லிமென்டை புறக்கணிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அப்போது தான், கடைமடை விவசாயிக்கும் தாராளமாக நீர் சென்றடையும். இப்பணிகளை உழவர் பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும். அப்போது தான், குளங்களில் தேக்கப்படும் நீரை, வேளாண்மைக்கு முழுமையாகப் பயன்படுத்த முடியும்.காவிரி ஆற்றில், கொள்ளிடம் பகுதியில், 17 கதவணைகளை அமைக்க வேண்டும் என, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன்மூலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கதவணைகளை மூடியும், பிற சமயங்களில் திறந்தும் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியும். கடலை நோக்கிச் செல்லும் காட்டாற்று நீரை தேக்கி பயன்படுத்த, தடுப்பணைகள் கட்ட வேண்டியது அவசியம்.

பால், உரமாக பயன்படும் எருவை வழங்கும் மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும். கிராமப்புற ஆண்களும், பெண்களும் கொண்ட குழுக்களை அமைத்து, அக்குழுவிடம், மாடு வளர்ப்பதை ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நிதியுதவியும் வழங்க வேண்டும்.ஆறு, ஏரி, குளம் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே, இயங்கி வரும் ஆலைகள் குறித்து கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு முடியும் வரை, அந்த ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரி, குளங்களில் மீன் வளர்ப்புக்கு ஊக்கம் அளிப்பதோடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் அப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், கிராமப்புற மக்களிடம் நிலவி வரும் சத்துணவு குறைபாடுகளைப் போக்க முடியும்.

தோட்டக்கலையில், சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்கள் மற்றும் மாம்பழம் போன்ற பழ வகைகள் சாகுபடியை பெருக்க வேண்டும். நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து பயிர்களையும் கொள்முதல் செய்ய புதிய மையங்களையும் தொடங்க வேண்டும்.
ஊராட்சிகளில் உழவர் ஆலோசனை மற்றும் சேவை மையங்களைத் தொடங்க வேண்டும். இதன் மூலமே, சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள் வழங்கலாம்; பயிர் சாகுபடி பற்றி ஆலோசனைகளை அளிக்கலாம்; வேளாண்மை கருவிகளை வழங்கலாம்.வெள்ளப்பெருக்கு காலங்களில், பயிர் சேதங்களைத் தடுக்க பாரம்பரியப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். ஒற்றை நாற்று முறை மூலம் நெல் உற்பத்தி 3 டன் முதல் 5 டன் எக்டேருக்கு அதிகரித்துள்ளது. இதை நாடு முழுவதும் பரப்புவதன் மூலம், அரிசி தட்டுப்பாட்டைப் போக்க முடியும். ஒற்றை நாற்று முறையை, மற்ற பயிர்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும்.

சோளம், கம்பு, தினை, சாமை போன்ற சத்துணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். தரிசாக உள்ள நிலங்களில், இதன் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.தேசிய பல்லின பன்மை வாரியத்தை தமிழகத்துக்கு என அமைக்க வேண்டும். மரபின மாற்றுப் பயிர்களை தடை செய்ய வேண்டும். மாநில பட்டியலில் தான் வேளாண்மை உள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை மாநில அரசே செய்ய முடியும். மரபின மாற்றுப் பயிர்களால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர் குடிக்கும் நோய்கள் பரவும் என்பதால், அதன் ஆராய்ச்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

கால்நடை மற்றும் விதைப் பண்ணைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், அதன் மூலம் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், மகளின் சுயஉதவிக் குழுக்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை வெற்றியடைந்து வரும் இந்த வேளையில், அதை விரிவுபடுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன வசதிகளை எற்படுத்த, 100 சதவீத மானியத்தையும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்த அளிக்கப்படும் மானியத்தை, இயற்கை வழி வேளாண்மையைச் செய்யும் விவசாயிக்கும் அளிக்க வேண்டும்.இவற்றை அடுத்து அமையும் அரசு விரைவாகச் செய்யுமானால், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?' என்ற பாடல் வரிகளை உண்மையாக்க முடியும்.

நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.

No comments:

Post a Comment