Friday, January 14, 2011

வீ.கே.புதூர் தாலுகா அலுவலகம் முன் வேகத்தடை அமைக்க கோரிக்கை

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன் வேகத்தடை அமைத்து விபத்தினை தடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீரகேரளம்புதூர் வளர்ந்து வரும் தாலுகா தலைநகராக உள்ளது. தினமும் ஆயிரக்ககணக்கான மக்கள் தாலுகா அலுவலகத்திற்கும், வீரகேரளம்புதூர், ஆலங்குளம் தாலுகா பகுதி அரசு அலுவலர்கள் கணக்கு வைத்துள்ள கனரா பாங்கிற்கும் மற்றும் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரி, அண்ணாசாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், புனித அந்தோணியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனம் முதலான கல்வி நிறுவனங்களுக்கும், போலீஸ் ஸ்டேஷனிற்கும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இரு சக்கர வாகனங்கள், தனியார் பால் பதனிடும் தொழிற்சாலைக்கு பால் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பஸ் மற்றும் பிற வாகனங்கள் விரைவாக வந்து தாலுகா அலுவலகத்தின் முன் திரும்புவதால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தாலுகா அலுவலகத்தின் முன்பாக ரோட்டின் இரு இடங்களிலும், தாயார் தோப்பு ரோட்டின் முகப்பிலும் வேகத்தடைகள் அமைத்து விபத்தினை தடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் வீரகேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் முன்பாக அமைக்கபட்டுள்ள இரண்டு வேகத்தடைகளும் விரைந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வண்ணம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவற்றின் மீது வெள்ளை வர்ணம் பூசி, வேகத்தடை எச்சரிக்கை போர்டும் வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment